இலங்கையில் இன்று நள்ளிரவு விண்கல் மழையை காணலாம்
14 மார்கழி 2023 வியாழன் 10:41 | பார்வைகள் : 2586
இன்று நள்ளிரவு விண்கல் மழையை அவதானிக்க முடியுமென ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.
பைதான் 3,200 சிறுகோளில் இருந்து கழிவுகள் பூமியை கடந்து செல்வதால் இது நிகழ்கிறது என்று கூறப்படுகிறது.
அதன்படி, பைதான் 3,200 சிறுகோளின் கழிவுகள் பூமியின் வளிமண்டலத்தில் மோதிய பிறகு இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெளிவான வானில் ஒரு மணி நேரத்திற்கு 100 முதல் 120 விண்கற்கள் வரை அவதானிக்கலாம்.
14ஆம் திகதி இரவு 9.00 மணிக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு தெளிவான வான் பகுதியில் இதனை அவதானிக்க முடியும் என சிரேஷ்ட வானியலாளர் இந்திக்க மெதகங்கொட குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவினை அவதானிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் ஜெமினிட்ஸ் என சொல்லப்படும் இந்த எரிகல் மழை உச்சத்தை அடையும் சமயத்தில் ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான எரிகற்களை நாம் காண முடியும்.
விண்கற்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து சாம்பலாவதால் ஏற்படும் நெருப்புச் சிதறல் நட்சத்திரம் புஸ்வாணம் போல சீறிப் பாய்வதாக காட்சியளிக்கும்.