கனடாவில் தொலைபேசி மூலம் மோசடி - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
15 மார்கழி 2023 வெள்ளி 09:01 | பார்வைகள் : 2504
கனடாவின் ரொறன்ரோவில் தொலைபேசி வழியாக இந்த மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனச் சமூகத்தைச் சேர்ந்த மக்களை இலக்கு வைத்து மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் வாழ்ந்து வரும் சீன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்குவதாகத் தெரிவித்து மோசடி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில் இடம்பெற்ற மோசடியுடன் தொடர்புபடுத்தி கப்பம் கோர முயற்சிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்படும் சீனர்களின் பெயர்களில் சீனாவில் வங்கிக் கணக்கு திறக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும்,
இந்த குற்றச் செயலிலிருந்து தப்பிக்க கப்பம் செலுத்த வேண்டுமெனவும் கோரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கப்பம் செலுத்த தவறும் நபர்கள் நாடு கடத்தப்படுவர் என மிரட்டல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்று வருவதனால் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொலைபேசி ஊடாக தங்களது தனிப்பட்ட விபரங்கள் வங்கி விபரங்கள் போன்றனவற்றை வழங்க வேண்டாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் மென்ரின் மொழியை சரளமாக பேசும் நபர்களினால் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.