Paristamil Navigation Paristamil advert login

மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் அமைச்சர் வேலு விளக்கம்

மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் அமைச்சர் வேலு விளக்கம்

16 மார்கழி 2023 சனி 06:05 | பார்வைகள் : 1662


அமைச்சர் வேலு வெளியிட்டுள்ள அறிக்கை:

சேலத்தில் முன்னர் செயல்பட்டு வந்த, மாடர்ன் தியேட்டர்சின் நுழைவாயிலில், சிலை அமைப்பதற்காக, அந்த இடத்தை கேட்டு, அரசு சார்பில் நிர்ப்பந்திக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.

இந்நிறுவனம் செயல்பட்டு வந்த, 8.9 ஏக்கர் நிலம், தற்போது மனைகளாகவும், வணிக பகுதியாகவும் மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நுழைவாயில் வளைவு, சேலம் - ஏற்காடு நெடுஞ்சாலையில், கன்னங்குறிச்சி கிராமத்தின் சர்வே எண், 8ல் உள்ளது.

இந்த சாலையை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளதால், நெடுஞ்சாலைத் துறை நிலங்களின் எல்லைகளை, நிர்ணயம் செய்வதற்காக, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களால், இம்மாதம் 2ம் தேதி அளவீடு நடத்தப்பட்டது.

அளவீட்டின்போது மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு முழுமையாக, நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. 

அரசின் நில வரைபடத்தில் உள்ளவாறு, எல்லைகளை வரையறுப்பதற்காக, நெடுஞ்சாலை எல்லையில், எந்த சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.

மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத்துறை நிலத்திலேயே, முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. பழமையான நுழைவாயில் வளைவை பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம். 

இந்தப் பகுதியில் வேறு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ, அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. எனவே, நெடுஞ்சாலைத்துறை இடம் தவிர, வேறு இடத்தை கேட்டு, அரசு தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக்கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்