இரவு சரியாக தூங்கவில்லை எனில் புற்றுநோய் வருமா..?
16 மார்கழி 2023 சனி 12:35 | பார்வைகள் : 2225
முக்கியத்துவம் தெரிந்தும் அதை பின்பற்ற தவறும் அத்தியாவசிய விஷயங்களில் தூக்கமும் ஒன்று. தினசரி போதுமான அளவு நிம்மதியாக தூங்கினால் மட்டுமே நம்முடைய ஒட்டு மொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
இது நம் அனைவருக்குமே தெரியும், இருந்தாலும் பல்வேறு காரணங்களால் முன்பு எப்போதாவது தான் சரியாக தூங்கவில்லை என்று நாம் சொல்லும் வார்த்தையை சமீப ஆண்டுகளாக அடிக்கடி பயன்படுத்தி வருகிறோம். இதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும் நாம் எந்த அளவு தூங்குகிறோம் என்று. அன்றாட வேலைப்பளு, நிதி சார்ந்த சிக்கல், சந்திக்கும் சவால்களால், தனிப்பட்ட பிரச்சனைகள் போன்றவற்றால் நிம்மதியான தூக்கத்தை தொலைப்பவர்கள் இருக்கிறார்கள்.
அதே சமயம் தூங்க நேரம் கிடைத்தும் டிஜிட்டல் டிவைஸ்களில் நேரம் செலவழிப்பது உள்ளிட்ட தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு தூங்காமல் நேரம் கடத்துபவர்களும் இருக்கிறார்கள். இதனிடையே சமீபத்திய ஆய்வு ஒன்று தூங்கும் நேரம் மற்றும் தரம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் கேன்சர் உருவாகும் ஆபத்து உள்ளிட்டவற்றுக்கு இடையேயான தொடர்பை பற்றி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் குறைந்த நேரம் தூங்குபவர்களுக்கு, கேன்சர் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுகள் இந்த அபாயத்தை சுட்டிக்காட்டுகின்றன. பகல் நேர தூக்கத்தை தவிர்த்து நாளொன்றுக்கு இரவு தூக்கம் 6 மணி நேரத்திற்கும் குறைவாக கொண்ட நபர்கள், குறிப்பாக 7 மணி நேரத்திற்கும் குறைவாக தொடர்ந்து தூங்கி வரும் நபர்களுக்கு கேன்சர் ஏற்படும் அபாயம் அதிகம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
இரவு நேரங்களில் டிவி பார்ப்பது மற்றும் மொபைல் உள்ளிட்ட டிஜிட்டல் டிவைஸ்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல ஆரோக்கியமற்ற பழக்கங்கள் மக்களின் தூக்க முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி பல பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கின்றன.
நமது உடலின் உள் கடிகாரம் சர்க்காடியன் ரிதம்ஸ் (circadian rhythms) எனப்படும் 24 மணி நேர சுழற்சிகளை கட்டுப்படுத்துகிறது. அந்த வகையில் தூக்கம்-விழிப்பு சுழற்சிகள் மற்றும் எண்ணற்ற பிற செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை செய்து வரும் உடலின் பயாலஜிக்கல் கிளாக்கில் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. இது மார்பகம், பெருங்குடல், கருப்பைகள் மற்றும் ப்ரோஸ்டேட் போன்ற கேன்சர் அபாயத்தை ஏற்படுத்த கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.
பலரும் அலுவலகத்தில் நைட் ஷிஃப்ட் பார்ப்பது, தூக்கம்-விழிப்பு சுழற்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கான முக்கிய ஹார்மோனான மெலடோனின் லெவல் குறைய வழிவகுக்கிறது. மெலடோனின் குறைவது கேன்சர் செல்களின் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த கூடும். அதே போல உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு அத்தியாவசியமான டி-செல்களின் மீளுருவாக்கம் மற்றும் அதன் சிறப்பான செயல்பாட்டிற்கு சிறந்த தூக்கம் என்பது மிகவும் அத்தியாவசியமானது. கேன்சருக்கு எதிராக உடல் பாதுகாப்பாக இருக்கவும், போராடவும் டி-செல்கள் (T-cells) முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒவ்வொரு இரவும் குறைந்தபட்சம் ஏழு மணிநேரம் நிம்மதியான தூக்கத்தை நாம் இலக்காக கொள்ள வேண்டும். சிலர் வார நாட்களில் தூங்காமல் விட்ட நேரத்தை ஈடு செய்ய வார இறுதி நாட்களில் நீண்ட நேரம் தூங்குவார்கள். ஆனால் இந்த முயற்சி தூக்கமின்மையுடன் தொடர்புடைய பிற நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்காது.
இரவு நேரமுடன் தூங்க செல்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்குவது. நீங்கள் தூங்கும் அறையில் மற்றும் உங்களுக்கு அருகில் மொபைல் போன்ற கேஜெட்ஸ் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். அதே போல தூங்க செல்லும் சில மணி நேரங்களுக்கு முன்பே டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்பாட்டை குறைத்து கொள்ளுங்கள்.