மன்னிப்பதன் முக்கியதுவம் தெரியுமா..?
16 மார்கழி 2023 சனி 15:15 | பார்வைகள் : 1730
நம்மைச் சுற்றியுள்ள குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என எல்லோருமே ஏதோ ஒரு தருணத்தில் சிறு தவறுகளை செய்யத்தான் செய்வார்கள். அந்த தவறுகளை பெரிதுப்படுத்தி, அவர்களுடனான உறவை முறித்துக் கொண்டாம் என்றால், ஒரு கட்டத்தில் நாம் தனிமரமாக நிற்க வேண்டியிருக்கும். ஏனென்றால் யார் ஒருவரும் தவறிழைக்காமல் இருக்கப் போவதில்லை என்னும் சூழலில், எல்லோரையும் பகைத்துக் கொண்டால் பிறகு நம்மோடு பழகுவதற்கு யார் ஒருவரும் எஞ்சியிருக்க மாட்டார்கள். ஆகவே, செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பவன் மனிதன், அதை ஏற்றுக் கொள்பவன் மாமனிதன் என்ற வழக்குமொழியை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
மன்னிப்பின் சக்தி : மன்னிப்பதன் மூலமாக இரு தரப்பிலும் உளப்பூர்வமான புரிதல் ஏற்படும். நம்மைச் சுற்றியுள்ள தொடர்புகள் அர்த்தமுள்ளதாக மாறும். நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வதற்கான கதவுகள் திறக்கும்.
மன இறுக்கத்தில் இருந்து விடுதலை : மன இறுக்கத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் அதற்கு சக்தி வாய்ந்த ஆயுதமாக இருப்பது மன்னிப்பு தான். ஏனென்றால் கோபம் மற்றும் வன்மம் ஆகியவை நம் மனதில் தேவையில்லாத பாரத்தை கொடுக்கும். அதுவே மன்னிக்க பழகிவிட்டால் தேவையற்ற எதிர்மறை உணர்வுகளில் இருந்து நாம் விடுதலை பெறலாம்.
உறவுகளை தக்கவைத்துக் கொள்ளலாம் : மன்னிப்பதன் மூலமாகத்தான் மனதில் உறவுகளை தக்கவைத்துக் கொள்ள முடியும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாழ்க்கைத் துணை உடனான சின்னஞ்சிறு பிரச்சினையாகக் கூட இருக்கலாம். மன்னித்தால் மட்டுமே அந்த பந்தத்திற்கு பாலம் ஏற்படுத்தி இணைக்க முடியும்.
குழப்பங்களுக்குத் தீர்வு : கருத்துவேற்றுமைகளை கடந்து, எதிர்மறை உணர்வுகளை மறந்து நல்லதொரு புரிதல் மற்றும் தீர்வை ஏற்படுத்திக் கொள்ள மன்னிப்பு ஒன்றே தீர்வாகும். வெளிப்படையான உரையாடல் மூலமாக எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். அடுத்தடுத்து வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
நேர்மறை சிந்தனை : மன்னித்து விட்டால் கடந்தகால கசப்புகளை மறந்து, எதிர்கால விஷயங்கள் மீது நேர்மறையான சிந்தனையுடன் செயல்பட முடியும். கடந்த கால தவறுகளை நினைத்துக் கொண்டிருந்தால் நாம் அதிலேயே மூழ்கிக் கிடக்க வேண்டியிருக்கும்.
கருணை உணர்வு : நம்மைச் சுற்றியுள்ள எல்லோரிடமும் எப்போதுமே அன்பும், கருணையும் கொண்டிருந்தால் மட்டும்தான் நல்லெண்ண வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். மாறாக, அவர்களுடைய தவறுகளை எண்ணிக் கொண்டிருந்தால் எதிர்மறை விளைவுகள் தான் மிஞ்சும்.
சுய வளர்ச்சி : மன்னிக்கும் மனிதன் தன் சுய வாழ்க்கையில் மாபெரும் வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும். வன்மம் மற்றும் கோபம் நம் மனதில் குடியிருந்தால் நாம் வளர்ச்சி காண முடியாது.
அமைதி மற்றும் நெருக்கம் : நம் மனதில் குடிகொண்டிருக்கும் கோபம் தணிந்து, அமைதி ஏற்படவும், தொடர்புடைய நபர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் மன்னிப்பு என்பது அவசியமாகும்.
உடல்நலன் : கோபம் மற்றும் வன்மம் குடிகொண்டிருந்தால் மன அழுத்தம் மற்றும் கவலை ஏற்படலாம். அதன் எதிரொலியாக பல பிரச்சினைகள் எழும். அதுவே மன்னித்தால் அனைத்தும் முடிவுக்கு வரும்.