பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முகவர் காஸாவில் பலி! - விளக்கம் கோரும் பிரான்ஸ்!!
17 மார்கழி 2023 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 3062
பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் முகவர் ஒருவர், காஸாவின் Rafah பகுதியில் வைத்து கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேலிய இராணுவத்தினரின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா பகுதிக்குட்பட்ட Rafah பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், வீடு ஒன்று சேதமடைந்ததாகவும், அங்கு வசித்த 10 பேர் வரையானவர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் படுகாயமடைந்த பிரெஞ்சு வெளியுறவுத்துறை முகவர் ஒருவரே பலியானதாக அமைச்சம் குறிப்பிட்டுள்ளது.
“புதன்கிழமை மாலை இஸ்ரேலிய குண்டுவீச்சினால் வீடொன்று தகர்க்கப்பட்டது. இது எங்கள் முகவர் ஒருவரை பலத்த காயப்படுத்தியது. மேலும் சுமார் பத்து பேர் வரை காயமடைந்தனர்!” என அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் தரப்பு எவ்வித தகவல்களும் வெளியிடாத நிலையில், இது தொடர்பாக பிரான்ஸ் விளக்கம் கோரியுள்ளது.