இலங்கை அணியின் ஆலோசகராக சனத் ஜெயசூரியா நியமனம்
17 மார்கழி 2023 ஞாயிறு 08:48 | பார்வைகள் : 1460
இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியாவை நியமிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை தோல்விக்கு பின்னர் இலங்கை கிரிக்கெட்டில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் முன்னாள் ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூரியா முழுநேர ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த வியாழக்கிழமையே இலங்கை வெளியிட்ட அறிக்கையின்படி, உடனடியாக ஜெயசூரியா பணியமர்த்தப்பட்டு தனது வேலையை தொடங்குவார் என கூறப்பட்டது.
மேலும் அந்த அறிக்கையில், 'இந்த பதவியின் கீழ், SLC தேசிய ஆட்டங்கள் ஒரு சிறந்த நிபுணத்துவத்தை அடைவதை உறுதி செய்வதற்கும், அனைத்து வீரர்களும், பயிற்சியாளர், பணியாளர்களும் சிறந்து விளங்குவதற்கு கண்காணிக்கப்படுவதற்கும் ஜெயசூரியா பொறுப்பாவார்' என்று தெரிவிக்கப்பட்டது.
அவர், மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஏற்ப தனிப்பட்ட திறன் மேம்பட்டு உத்திகளை செயல்படுத்துதல் மற்றும் தடகள மேலாண்மை அமைப்புடன் இணைந்த அனைத்து வீரர்களின் அறிக்கையின் இணக்கம் ஆகியவற்றை மேற்பார்வையிடுவார் என்றும் SLC கூறியுள்ளது.
சனத் ஜெயசூரியா இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் மற்றும் 445 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 20 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார். அத்துடன் 421 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.