பல்லாயிரக்கணக்காக வீரர்களை இழந்த ரஷ்யா! உக்ரைன் தகவல்
17 மார்கழி 2023 ஞாயிறு 09:45 | பார்வைகள் : 3800
உக்ரைன் ரஷ்யப்போர் ஒரு வருடத்திற்கும் மேலாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் 6,700 ராணுவ வீரர்களை ரஷ்யா இழந்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 2022ம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதியில் தொடங்கி இடைவிடாமல் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், இதில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை உக்ரைன் ஆயுதப் படையின் ஜெனரல் வெளியிட்ட தகவலில், ரஷ்யா கடந்த 7 நாட்களில் மட்டும் 6,700 ராணுவ வீரர்களை இழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினத்தில் மட்டும் 930 ராணுவ வீரர்களை இழந்து இருப்பதாகவும், இந்த வாரத்தில் உள்ள 3 நாட்களில் ரஷ்யா 1000க்கும் அதிகமான வீரர்களை இழந்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனுடன் ரஷ்யா 88 டாங்கிகளையும் இழந்து இருப்பதாகவும், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 5,720 டாங்கிகளை ரஷ்யா இழந்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆனால் உக்ரைனின் புள்ளி விவரங்கள் மற்ற மதிப்பீடுகளை விட அதிகமாக இருப்பதால் ரஷ்ய வீரர்கள் இழப்பினை சரியாக கணக்கிடுவது கடினமாக உள்ளது.
கடந்த ஒக்டோபரில் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலில், 1,90, 000 வீரர்களை ரஷ்ய ராணுவ இழந்து இருப்பதாக தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து டிசம்பர் 12 ஆம் திகதி அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யா 3,60,000 வீரர்களை இழந்து இருப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.