Paristamil Navigation Paristamil advert login

குடும்பங்கள் பின்பற்ற வேண்டிய `செய்முறை பயிற்சி'

குடும்பங்கள் பின்பற்ற வேண்டிய `செய்முறை பயிற்சி'

17 மார்கழி 2023 ஞாயிறு 10:06 | பார்வைகள் : 1102


கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகளை உள்ளடங்கிய குடும்பம் என்கிற கட்டமைப்பு இருப்பதாலேயே இன்பத்துடன் துன்பங்களை எதிர்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் மனித வாழ்க்கை பயணித்து கொண்டிருக்கிறது. அத்தகைய குடும்ப வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும். கொண்டாட்டம் என்றால் புன்னகைத்துக்கொண்டு இருப்பது மட்டுமல்ல.

எல்லா சூழல்களையும் ஏற்றுக்கொள்வதும், எதிர்கொள்வதும், கடந்துசெல்வதும் தான். இதனை நமது அன்றாட வாழ்வில் பொருத்திப்பார்க்கும்போது வாழ்க்கை அழகாக தெரியும். இன்றைய இயந்திர வாழ்க்கை சூழலில் அதனை செயல்முறை பயிற்சி வழியாக கற்றுக்கொள்வதும், பின்பற்றுவதும் அவசியமானது.

அது என்னவெனில் 1.நன்றி சொல்தல் 2.பாராட்டுதல் 3.மன்னித்தல். 

இந்த மூன்று வார்த்தைகளை அன்றாடம் குடும்ப உறுப்பினர்களிடத்தில் பயன்படுத்த வேண்டும். அதாவது கணவன் - மனைவி, பெற்றோர், பிள்ளைகள், சகோதர - சகோதரிகள் என எல்லோர் மட்டத்திலும் பயன்படுத்தினால் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் கொண்டாட்டமாகவே அமையும்.

முதலாவது, நன்றி சொல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். நாம் மற்றவரை மதிக்கிறோம் என்ற உணர்வை அது வெளிப்படுத்தும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு செய்த உதவி சிறியதாக இருந்தாலும் நன்றி சொல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். நாம் அவர்களையும், அவர்களது செயல்களையும் ஏற்றுக்கொள்கிறோம் என்ற நம்பிக்கையை இது உருவாக்கும்.

இரண்டாவது, பாராட்டுதல். குடும்ப உறுப்பினர்கள் முன்னின்று செய்யும் செயல்களுக்கு மனதார பாராட்ட வேண்டும். அதற்கு தயங்கக்கூடாது. பாராட்டுவது அந்த நபரின் உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம். குறிப்பாக மனைவியின் ஒவ்வொரு செயல்களையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். `சாப்பாடு நல்லா இருந்துச்சு' என்று சொல்லும்போது அது அவருக்கு மாபெரும் மகிழ்ச்சியையும், அங்கீகாரத்தையும் அளிக்கும்.

அதுபோல் மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு வழங்குவதும் முக்கியமானது. எதிர்பாராதவிதமாக சிறு தவறுகள் நடக்கலாம். அதனை உணர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மன்னிப்பு கேட்கும் போது மன்னித்துவிட வேண்டும். தவறுகளை மன்னிக்கும் போதுதான் அவர் மீது நல்ல புரிதல் ஏற்படும். சில சமயங்களில் மன்னிக்க முடியாத தவறை செய்திருந்தாலும் கூட கோபத்தை வெளிப்படுத்தாமல் அனுசரணையுடன் நடந்து கொள்ள வேண்டும். அந்த மன நிலையே மன்னிக்கும் பக்குவத்தை நமக்கு கொடுக்கும். மன்னிப்பு என்பது அன்பின் உச்சகட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று வழிமுறைகளையும் செயல்முறை பயிற்சியாக அன்றாடம் பின்பற்றும்போது என்ன நடந்தாலும் குடும்ப வாழ்க்கை நிம்மதியாக நகரும். இந்த செயல்முறை பயிற்சி நம்மிலும், குடும்பத்திலும் ஆரோக்கியமான உளவியல் மாற்றத்தை தரும் என்பது உளவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. இதனை அன்றாடம் பயிற்சி செய்வோம்... மகிழ்ச்சியாக வாழ்வோம்!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்