பிரித்தானியாவில் அதிகரித்துவரும் அகதிகளின் எண்ணிக்கை... பிரதமர் ரிஷி எச்சரிக்கை
18 மார்கழி 2023 திங்கள் 09:05 | பார்வைகள் : 2834
ஐரோப்பாவின் சில பகுதிகளில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடிய அபாயம் உள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியா, புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகிறது.
புகலிடம் கோருவோரை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்துவது போன்ற கடினமான திட்டங்களால் புலம்பெயர்வோரை அச்சுறுத்த முயன்று வருகிறார்கள், பிரித்தானிய பிரதமரும், உள்துறைச் செயலர்களும்.
ஆனால், ஐ.நா அகதிகள் ஒப்பந்தம் அதற்கு தடையாக உள்ளது.
தங்கள் உயிருக்கும், சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் என்று கூறி அகதிகளாக வருவோரை, அவர்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என்கிறது ஐ.நா அகதிகள் ஒப்பந்தம்.
இது, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் ஒன்றாகிய பிரித்தானியாவின் ருவாண்டா திட்டத்துக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.
ஆகவே, மொத்த உலக புகலிடக்கோரிக்கை அமைப்பிலும் மாற்றம் செய்யப்படவேண்டும் என்று கூறும் பிரித்தானிய பிரதமர் ரிஷி, தான் அதற்காக முயற்சி மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அகதிகளுக்கு ஆதரவான சட்ட திட்டங்களை மாற்றி, பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் அகதிகளை தடுத்து நிறுத்த, உலக அளவில் நடவடிக்கை எடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் அவர்.
அதற்கான பிரச்சாரத்திலும் அவர் இறங்கிவிட்டார்.
சனிக்கிழமையன்று இத்தாலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரிஷி, உலக புகலிட அமைப்பை கடுமையாக விமர்சித்தார்.
நம் நாடுகளில் இந்த அகதிகளின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகி, உண்மையில் யாருக்கு உதவி அதிகம் தேவையோ, அவர்களுக்கு உதவ முடியாத ஒரு நிலையை உருவாக்கிவிடும் என எச்சரித்துள்ளார்.