பரிசில் இருந்து 30% சதவீத போக்குவரத்தை மட்டுப்படுத்தும் திட்டம்!!

18 மார்கழி 2023 திங்கள் 19:00 | பார்வைகள் : 5805
ஒலிம்பிக் போட்டிகளை இலக்கு வைத்து பரிசில் புதிய போக்குவரத்து திட்டம் ஒன்றை பரிஸ் நகரசபை திட்டமிட்டுள்ளது. zone à trafic limité // ZTL என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் பரிசில் இருந்து 30% சதவீத போக்குவரத்தை மட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசின் முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வட்டாரங்களை ஒன்றிணைத்து ‘மத்திய பரிஸ்’ என அழைக்கப்படுவது அறிந்ததே. இந்த பகுதியில் இருந்து 30% சதவீத போக்குவரத்து நெரிசலை மட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசடைவை பெரிதளவில் குறைக்கவும் இந்த திட்டம் வழிவகுக்கும் என தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் இருந்து இந்த புதிய போக்குவரத்து திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இந்த மத்திய பரிஸ் பகுதியில் வசிப்பவர்கள், வணிகர்கள், வாடகை மகிழுந்துகள், மற்றும் பார்வையாளர்களின் வாகனங்கள் தவிர்த்து ஏனைய எந்த ஒரு வாகனங்களும் அங்கு நிறுத்தவோ பயணிக்கவோ தடை விதிக்கப்படும் என அறிய முடிகிறது.
அதேவேளை, இந்த ZTL பகுதியை ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததன் பின்னரும், நிரந்தரமாக நடைமுறைக்கு கொண்டுவரவும் பரிஸ் நகரசபை திட்டமிட்டு வருகிறது. அதற்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது.