சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 111 பேர் பலி
19 மார்கழி 2023 செவ்வாய் 08:13 | பார்வைகள் : 2021
சீனாவின் வடமேற்கு மலைப்பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 111 பேர்கள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கிங்காய்-திபெத்திய பீடபூமியின் வடக்கு விளிம்பில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 230 பேர்களுக்கும் அதிகமானோர் காயங்களுடன் தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள ஜிஷிஷான் கவுண்டியில் உள்ளூர் நேரப்படி இரவு 11:59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பேரழிவின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு உயர்மட்ட குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை 111 பேர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை வெளியாகவில்லை.
கிங்காய்-திபெத்திய பீடபூமியின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள கன்சு போன்ற மேற்கு மாகாணங்களில் நிலநடுக்கம் என்பது பொதுவானவை என்றே கூறப்படுகிறது.
சீனாவின் மிக மோசமான நிலநடுக்கம் என்பது 2008ல் சிச்சுவானில் 8.0 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 70,000 பேர் கொல்லப்பட்டனர்.
சமீபத்திய நிலநடுக்கம் கன்சுவிற்கும் அண்டை மாகாணத்திற்கும் இடையிலான எல்லையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி, கிங்காய் மாகாணத்தின் பல பகுதிகளில் பலத்த நடு அதிர்வுகளும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, மாகாண தீயணைப்புத் துறை மற்றும் வனப் படை மற்றும் தொழில்முறை அவசரகால மீட்புக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 2,200 மீட்புப் பணியாளர்கள் பேரிடர் பகுதிக்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் குடிநீர் வசதிகள், மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் ஆனால் அதிகாரிகள் தரப்பில் மேலதிக விவரங்களை வழங்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.