ஜிம்பாப்வேயில் வானிலை மாற்றத்தால் அழியும் உயிரினங்கள்
20 மார்கழி 2023 புதன் 10:29 | பார்வைகள் : 3172
தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயின் மிகப்பாரிய தேசிய பூங்காவான Hwange National Park-ல் கடந்த சில வாரங்களில் 100க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன.
இது ஜிம்பாப்வேயில் மிகபெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் தொடர்பாக அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கைகளுக்கு இந்த யானைகளின் மரணம் சான்றாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தெற்கு ஆப்பிரிக்காவின் ஹ்வாங்கே தேசியப் பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளில் குறைந்த மழை மற்றும் வெப்பம் அதிகரிப்பதால் மேலும் சில யானைகள் இறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
ஜிம்பாப்வே தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டினாஷே ஃபராவ், எல் நினோ காரணமாக நிலைமைகள் மோசமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
மாறிவரும் பருவநிலை காரணமாக வனவிலங்குகள் அழியும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த பூங்காவில் இதுபோன்ற நிலைமைகள் ஏற்படுவது இது முதல் முறை அல்ல, 2019-ஆம் ஆண்டிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டது. அப்போது பூங்காவில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. மீண்டும் அதே நிலை ஏற்படுமா என அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.
பூங்காவில் இறந்த யானைகளின் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு பாரிய யானைகள் காடை போல் விழுந்து கிடப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹ்வாங்கே தேசிய பூங்காவில் 4500 யானைகள், 100 க்கும் மேற்பட்ட பிற பாலூட்டி இனங்கள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. யானைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் அதிகம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.