கொழும்பில் பாரிய நிதி மோசடி - நம்பிச் சென்றவருக்கு அதிர்ச்சி
21 மார்கழி 2023 வியாழன் 09:28 | பார்வைகள் : 1908
கொழும்பில் பண மோசடியுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாகனங்களை விற்பனையில் மோசடியில் ஈடுபட்டதாகவும் இவர்கள் இதற்காக பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட அறையொன்றை பெற்றிருந்தனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பத்திரிகை விளம்பரத்தின்படி நேற்று புதன்கிழமை (20) குறித்த இடத்துக்கு இரண்டு கொள்வனவாளர்கள் கார் மற்றும் ஜீப் ஒன்றை கொள்வனவு செய்ய வந்துள்ளனர்.
இதன்போது சம்பந்தப்பட்ட வாகனங்களை விற்பதற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிக்க முற்பணம் தருமாறு குறித்த அலுவலகத்திலிருந்த முகாமையாளரும் மற்றொருவரும் கொள்வனவாளர்கள் இருவரிடமும் கேட்டுக்கொண்டனர்.
இதன்படி, ஒரு கொள்வனவாளரிடமிருந்து ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் ரூபாவும் மற்றைய நபரிடமிருந்து மூன்று கோடியே முப்பது இலட்சம் ரூபாவும் பெறப்பட்டுள்ளது.
பின்னர் பணத்தை பெற்ற அவர்களில் ஒருவர் குறித்த நிறுவனத்தின் அறைக்கு சென்று, வாகன திறப்பு மற்றும் ஆவணங்களுடன் பின்வாசல் வழியாக தப்பிச் சென்றார்.
இதனையடுத்து இரு கொள்வனவாளர்களும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணை நடத்திய பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் மூவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 41, 43 மற்றும் 65 வயதுடைய பன்னிபிட்டிய, மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.