Paristamil Navigation Paristamil advert login

கண்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் அழகு சாதன பொருட்கள்.

கண்களுக்கு  ஆபத்தை உண்டாக்கும் அழகு சாதன பொருட்கள்.

21 மார்கழி 2023 வியாழன் 10:46 | பார்வைகள் : 1743


நாம் அன்றாடம் கண்களுக்கு பயன்படுத்தும் கண் மேக்அப் பொருட்களானது நமது கண்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது உங்களுக்கு தெரியுமா? கண்களுக்கு பயன்படுத்தும் திரவங்கள், சஸ்பென்ஷன்கள், பைன் பவுடர் மற்றும் க்ளிட்டர் உள்ளிட்ட கண் அழகுசாதனப் பொருட்கள் கண்களை சேதப்படுத்தும் மற்றும் தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.

காஜல் மற்றும் ஐலைனர்களை தவறாக பயன்படுத்தினால் கண் இமை சுரப்பிகளில் பிரச்சனைகள் ஏற்படும், இது கண் இமை அழற்சிக்கு வழிவகுக்கும். மஸ்காரா, ஐ ஷேடோக்கள் மற்றும் க்ளிட்டர் ஆகியவை அழற்சி, கார்னியல் சிராய்ப்பு, கண் நிறமி பிரச்சனை மற்றும் கெராடிடிஸ் (கார்னியல் அழற்சி) ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும் இந்த மேக்அப் பொருட்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை வளர்க்கலாம். இவை கண் மேற்பரப்பில் இடம்பெயர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் கடுமையான கண் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

ஐலாஷ்கள் ஒருவித கெமிக்கல் பசையை பயன்படுத்தி கண் இமைகளுடன் இணைக்கப்படுகின்றன. இது சருமத்தை எரிச்சலடைய செய்யலாம் அல்லது சரியாக வைக்கப்படாத போது, ஒவ்வாமை பிரச்னையை ஏற்படுத்தும்.

தற்போது காண்டாக்ட் லென்ஸ்களும் அழகுக்காக அணியப்படுகின்றன. அவை சுத்தமாக இல்லாவிட்டால் கண்களுக்குள் தொற்று அல்லது அகாந்தமோபா கெராடிடிஸ் போன்ற தீவிர பார்வைக்கு அச்சுறுத்தும் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். எனவே கவனமாக பயன்படுத்த வேண்டும்.

கண்களைப் பாதுகாக்க உதவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கண்களுக்கு பயன்படுத்தும் மேக்அப் பொருட்கள் காலாவதி ஆகாதவையாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். கண்களுக்கு மேக்கப் போடும் முன் கண்களையும், முகத்தையும் சுத்தம் செய்யவும். நீங்கள் உங்கள் கண்களுக்கு பயன்படுத்தும் மேக்அப் கருவிகளை தனியாக, மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

‘லென்ஸ் ஃபர்ஸ்ட்’ என்ற விதியைப் பின்பற்றவும். அதாவது எந்த வித கண் மேக்கப் போடும் முன் முதலில் காண்டாக்ட் லென்ஸை போடுங்கள். கண்களில் தொற்று, சிவத்தல், நீர் வடிதல் போன்றவை ஏற்பட்டால் கண்களை தேய்க்க வேண்டாம். உடனடியாக ஒரு கண் மருத்துவரை அணுகவும். நீங்கள் பயன்படுத்தும் கண் மேக்அப் பொருட்களை 4 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றவும்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காண்டாக்ட் லென்ஸைப் மாற்றி பயன்படுத்தவும். தினமும் காண்டாக்ட் லென்ஸ் கரைசலை மாற்றி, லென்ஸ்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். உறங்கச் செல்வதற்கு முன் எப்போதும் மேக்கப்பை அகற்றவும், மேக்கப்பை அகற்றும் முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றவும். லென்ஸுடன் தூங்க வேண்டாம். கண் தொற்று ஏற்பட்டால் மேக்கப் போட வேண்டாம். மேலும் சுய மருந்துகளைத் தவிர்க்கவும்.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்