பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் ! - ஜனாதிபதி மக்ரோன் ஆதரவு கருத்து!
21 மார்கழி 2023 வியாழன் 11:47 | பார்வைகள் : 3815
பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிரெஞ்சு நகைச்சுவை நடிகர் Gérard Depardieu இற்கு ஆதரவான சில கருத்துக்களை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.
நடிகர் Gérard Depardieu மீது, ஸ்பெயினைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டினை வெளியிட்டிருந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்னர் பரிசில் வைத்து தன்னை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இருந்தபோதும் அவர் காவல்நிலையத்தில் புகார் எதையும் அளிக்கவில்லை.
இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிரான்சின் உயரிய விருதான Légion d'honneur இனை மீள பெறுமாறு பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை France 5 தொலைக்காட்சியின் C à vous நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி மக்ரோன், இந்த நேர்காணலின் போது சில கருத்துக்களை வெளியிட்டார்.
‘மனித வேட்டையினை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கும் வரை எந்த வித அவச்சொல்லையும் தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை. அதேபோன்று Légion d'honneur விருதினையும் திரும்பப்பெறவேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த கருத்து உடனடியாகவே இணையத்தளத்தில் பெரும் வைரலாக பரவி, அவருக்கு எதிரான கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.