Paristamil Navigation Paristamil advert login

முறையான வானிலை எச்சரிக்கை; மாற்றி பேசும் தமிழக அமைச்சர்கள்

முறையான வானிலை எச்சரிக்கை; மாற்றி பேசும் தமிழக அமைச்சர்கள்

22 மார்கழி 2023 வெள்ளி 08:02 | பார்வைகள் : 1498


சென்னையில் வடிகால் பணிகளுக்காக ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக கூறும்  தமிழக அமைச்சர்கள், மழை சேதம் வந்த பிறகு மாற்றி மாற்றி பேசுவது ஏன் என டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.  டிச.,18  காலை தகவல் கிடைத்த உடன் அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டோம்.  மத்திய அரசு கூடுதல் உதவி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மழை குறித்து தகவல் கிடைத்ததும் 4 மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை விடுத்தேன்.

துரிதமாக நடவடிக்கை 

தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில், ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.  கடற்படை, கடலோர காவல்படை, மத்திய மாநில அரசுகளின் பேரிடர் மீட்பு படையினர் மூலம் டிச.,21  வரை, 42,290 பேர் மீட்கப்பட்டனர்.  துரிதமாக நடவடிக்கை எடுத்தும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.  

மத்திய அரசின் அனைத்து துறைகளும் இணைந்து நடவடிக்கை எடுத்தன. ரயிலில் சிக்கி தவித்த 800க்கு மேற்பட்ட பயணிகளும், மாற்று ரயில் மற்றும் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தில்  இருந்த 2 கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் வெள்ள பாதிப்பை கண்காணித்தன.

இந்திய விமானப்படையின் 5 ஹெலிகாப்டர், கடற்படையின் ஒரு ஹெலிகாப்டர், கடலோர காவல்படையின் 3 ஹெலிகாப்டர் மூலம் , தலா 70 முறை மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  வெள்ளமோ, புயல் வந்தால், நிலைமை சீரான பிறகு தான் மத்திய குழுவினர் செல்வது வழக்கம். ஆனால், 4 மாவட்டங்களில் மத்திய குழுவினர் 19ம் தேதி மாலையே சென்று உடனடியாக ஆய்வில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம்,  கடற்படை, கடலோர காவல்படையினர் மட்டும் 5,049 பேரை மீட்டுள்ளது. 

ஸ்ரீவைகுண்டம் எஸ்விஎஸ் பள்ளியில் இருந்து கர்ப்பிணி , குழந்தை உட்பட 4 பேர் மட்டும் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். உடனே களத்தில் இறங்கியதால், அதிகம் பேரை மீட்க முடிந்தது. மக்கள் யாரையும் தொடர்பு இல்லாமல் இருந்த இடங்களில் , ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டன.

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநில நிவாரண நிதிக்கு நிதி வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு மத்திய அரசு கொடுக்க வேண்டிய 900 கோடியில் முதல் தவணையாக 450 கோடி ரூபாயை ஏற்கனவே வழங்கியிருந்தோம்.  2வது தவணையாக மீதியுள்ள 450 கோடியை டிச.,12 ல் வழங்கிவிட்டோம். 

தமிழகத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், 4 மாவட்டங்களில் வரக்கூடிய பாதிப்பு குறித்து 16,17 ல் தீவிரமான மழை வரும் என 12ம் தேதியே எச்சரிக்கை கொடுத்தது. இந்த மையம் அதிநவீனமானது. சென்னை வானிலை மையம் 5 நாட்கள் முன்னரே,  அடுத்து வரும் நாட்கள் என்ன நடக்க போகிறது என்பது பற்றி சொல்லிக் கொண்டு இருந்தனர். அதைத்தவிர, ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் எச்சரிக்கை கொடுத்து வந்தனர். 

வானிலை முன்னெச்சரிக்கை முறையாக அளிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை கிடைக்கவில்லை எனக்கூறியவர்கள் இதனை கவனிக்க வேண்டும். அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. சென்னை வானிலை மையத்தில்  3 டாப்லர் என்ற அதிநவீன கருவிகள் அங்கு உள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

ரூ.4 ஆயிரம் கோடி என்ன ஆனது

பிறகு நிருபர்களின் கேள்விக்கு  பதிலளித்த நிர்மலா சீதாராமன் கூறுகையில்;

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழக அமைச்சர்கள் எப்போது சென்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் செல்வதற்கு கூட  தமிழக அரசு சார்பில் யாரும் இல்லை.  கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்த பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.  சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைக்காக செலவு செய்ததாக கூறிய 4 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது? 

சென்னையில் புயல் பாதிப்புக்கு முன்னர்,  4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக கூறினர். ஆனால், சென்னை மழைக்கு பிறகு இது மாறியது. 92 சதவீத பணிகள் முடித்ததாக கூறியவர்கள், பிறகு 42 சதவீத  பணிகள் தான் முடிந்தது என்றனர். 

மத்திய குழுவினர், மாநில அரசு அளித்த தகவல் அடிப்படையில் சிறப்பாக பணி செய்யப்பட்டதாக கூறியிருக்கலாம்.  பிறகு அவர்கள் 92 சதவீதத்தில் இருந்து 42 சதவீதம் எனக்கூறிய பிறகு கேள்வி கேட்க துவங்கினோம்.  12ம் தேதி எச்சரிக்கை கொடுக்கவில்லை என்கிறீர்களா?

4 ஆயிரம் கோடி குறித்து சரியான தகவல் கொடுக்கவில்லை. மழைக்கு முன்னர் 92 சதவீத பணிகள் செய்ததாக கூறிய தமிழக அமைச்சர் 42 சதவீத பணிகள் தான் முடிவடைந்தது என்றார்.  92 சதவீத பணிகள் முடிவடைந்த பிறகு, அதிக மழை பெய்தது. அதனை எதிர்பார்க்கவில்லை எனக்கூறியிருந்தால் பரவாயில்லை.  ஆனால், 42 சதவீத பணிகள் செய்ததாக கூறுவது நிஜம் தானா என்ற கேள்வி எழுகிறது? சென்னை வடிகால் பணிக்கு முறையாக செலவு செய்யவில்லையோ என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்