Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., எம்.பி.,யின் 'தலைக்கனம்' பேச்சு தமிழக காங்கிரசார் கொந்தளிப்பு

தி.மு.க., எம்.பி.,யின் 'தலைக்கனம்' பேச்சு தமிழக காங்கிரசார் கொந்தளிப்பு

22 மார்கழி 2023 வெள்ளி 08:09 | பார்வைகள் : 2046


ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்., தோல்வியடையாமல் இருந்திருந்தால், அக்கட்சிக்கு தலைக்கனம் ஏற்பட்டிருக்கக் கூடும்' என தர்மபுரி தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் பேசியதற்கு, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர்.

இது குறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:

'இண்டியா' கூட்டணியை ஒருங்கிணைத்து, அதை பா.ஜ., வுக்கு எதிரான வலுவான கூட்டணியாக்க வேண்டும் என்பதில், முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக செயல்படுகிறார்.

ஆனால், அக்கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களிடம், அந்த தீவிரம் இல்லை. அவர்கள் காங்கிரஸ் கட்சியை இஷ்டத்திற்கு விமர்சித்து, வாய்க்கு வந்ததை பேசி வருகின்றனர்.

தி.மு.க.,வுக்கு தனி கொள்கைகள் இருக்கலாம். ஆனால், தேசிய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், மற்ற கட்சிகளின் கொள்கைகளோடு இணைந்து, அரசியல் செய்ய வேண்டும்.

அமைச்சர் உதயநிதி, ஹிந்துத்துவாவை கொச்சைப்படுத்துவதாக நினைத்து, சனாதனத்தை ஒழிப்போம் என பேசினார். இதனால், ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், மூன்று மாநிலங்களில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.


சமீபத்தில், தர்மபுரி தி.மு.க., - எம்.பி., செந்தில்குமாரும், 'கோ மூத்திரா' என வட மாநில மக்களை கொச்சைப்படுத்துவது போல பார்லிமென்டில் பேசினார். அதை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கடுமையாக எதிர்த்த பின், செந்தில்குமார் மன்னிப்பு கோரினார்.

சில நாட்கள் அமைதியாக இருந்த செந்தில்குமார், தற்போது காங்கிரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கிறார். சமாஜ்வாடி, கம்யூ., போன்ற கட்சிகளை 5 மாநில தேர்தலில் அரவணைத்திருக்க வேண்டும் என சொல்கிறார்.

கூட்டணி என, வரும்போது, அனைத்து தரப்பிலும் அரவணைப்பும், அனுசரணையும் இருக்க வேண்டும். அப்போது தான் கூட்டணி நிலைக்கும்; எதிர்பார்த்த பலன் கிட்டும்.

அதை விடுத்து, காங்கிரசை ஆளாளுக்கு விமர்சிப்பதும், காங்கிரசை சிறுமைப்படுத்துவது போல செய்வதையும் ஒருநாளும் தமிழக காங்கிரசார் ஏற்று கொள்ளமாட்டார்கள்.

காங்., தோல்விக்கு சனாதன பேச்சு தான் காரணம் என்பதை மடைமாற்றம் செய்வது போல, வெற்றி பெற்றிருந்தால் காங்கிரசுக்கு தலைக்கனம் ஏற்பட்டிருக்கக்கூடும் என, செந்தில்குமார் பேசியது அதிகபிரசங்கிதனம்.

எதிர்கட்சியாக இருந்த தி.மு.க., ஆளுங்கட்சியாக மாறி உடனே தலைகனம் ஏறி விட்டது என, காங்கிரஸ் சொன்னால் செந்தில்குமார் ஏற்று கொள்வாரா? ஆணவத்தின் உச்சத்தில் இருந்து கொண்டு செந்தில்குமார் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்