சொற்ப சீட்களை ஒதுக்கி காங்கிரசை காலை வாரும் கூட்டணி கட்சிகள்
22 மார்கழி 2023 வெள்ளி 15:09 | பார்வைகள் : 1968
வரவுள்ள லோக்சபா தேர்தலில் 'இண்டியா' கூட்டணியில் இடம்பெற்ற திரிணமுல் காங்., சமாஜ்வாதி கட்சிகள் காங்கிரசுக்கு சொற்ப எண்ணிக்கையிலான தொகுதிகளையே ஒதுக்க முன்வந்திருக்கிறது.
அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ.,வின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இண்டியா' கூட்டணியை உருவாக்கின. இதில், காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்., ஆம்ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் இண்டியா கூட்டணி கட்சியினரை மதிக்காமல் தனியாக போட்டியிட்ட காங்கிரஸ் 2 மாநிலங்களில் ஆட்சியை இழந்ததுடன், தெலுங்கானாவில் மட்டும் ஆட்சியை கைப்பற்றியது.
இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், இந்த தேர்தல்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதாக கூறியிருந்தார். இதற்கிடையே மேற்குவங்க முதல்வரும் திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, ''நாடு முழுவதும் காங்., 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம். ஆனால் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., தான் 'இண்டியா' கூட்டணிக்கு தலைமை, உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சி தான் தலைமை, டில்லி, பஞ்சாப்பில் ஆம்ஆத்மி தான் கூட்டணிக்கு தலைமை என்பதை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்'' எனப் பேசியிருந்தார்.
ஒற்றை இலக்கத்தில் 'சீட்'
அதாவது, லோக்சபா தேர்தலில் அந்தந்த மாநிலங்களில் உள்ள பெரிய கட்சிகளே அக்கூட்டணிக்கு தலைமை என்றும், அவர்கள் ஒதுக்கும் இடங்களிலேயே காங்., உள்ளிட்ட மற்ற கட்சிகள் போட்டியிட வேண்டும் என்றும் மறைமுகமாக தெரிவித்தார். இதன் வெளிப்பாடாக லோக்சபா தேர்தலில் மேற்குவங்கத்தில் காங்., கட்சி 6 சீட்கள் கேட்டுள்ளதாகவும், அதனை மறுத்த மம்தா 4 'சீட்' தான் ஒதுக்க முடியும் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், உத்தரபிரதேசத்தில் 20 இடங்கள் கேட்கும் காங்.,க்கு அதிகபட்சம், 6 'சீட்' தான் தர முடியும் என, சமாஜ்வாதி கட்சி கறாராக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தேசிய அளவில் பெரிய கட்சியாக திகழும் காங்கிரஸ் சமீப ஆண்டுகளாக அடைந்துவரும் தோல்விகளால் கூட்டணி கட்சிகளே மிகக்குறைந்த அளவில் சீட்களை ஒதுக்கி வருவது காங்.,க்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.