கார்கே பிரதமர் வேட்பாளரா? நிதீஷ்குமாருடன் ராகுல் ஆலோசனை
22 மார்கழி 2023 வெள்ளி 15:09 | பார்வைகள் : 1493
இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயை பிரதமர் வேட்பாளராக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்மொழிந்தார். இது தொடர்பாக காங்கிரசின் நிலைப்பாடு குறித்து, அக்கட்சி எம்.பி.,ராகுல். பீஹார் முதல்வர் நிதீஷ் குமாருடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் கடந்த செவ்வாய்(டிச.,19) அன்று டில்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், கார்கேயை, கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்மொழிந்தார். டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இதனை வழிமொழிந்தார். மற்ற கட்சிகளும் ஏற்றுக் கொண்டன. இதற்கு மறுப்பு தெரிவித்த கார்கே, ‛ இண்டியா' கூட்டணி முதலில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறுவதற்கு என்ன செய்யலாம் என்பதை சிந்திக்க வேண்டும் என்றார்.<br><br>இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நிதீஷ்குமாரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ராகுல் பேசினார்.
இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் கூறுகையில், கார்கேயை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து ராகுல் விளக்கினார். கூட்டணியை மேலும் பலப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் போது, பீஹார் அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்தும், அதில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.