சிறையில் செந்தில் பாலாஜியை சந்தித்தது யார்? தகவல் அளிக்க சிறை துறை, கவர்னர் பரிந்துரை
23 மார்கழி 2023 சனி 01:38 | பார்வைகள் : 1733
புழல் மத்திய சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்தவர்கள் குறித்த விபரங்களை கோரிய ஆர்.டி.ஐ., மனுவுக்கு, உரிய பதில் அளிக்குமாறு, சிறை துறை தலைவர் அலுவலகமும், கவர்னர் அலுவலகமும் பரிந்துரைத்துள்ளன.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் மத்திய சிறை மருத்துவமனையில், டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளார். அமலாக்கத்துறை கைது செய்தாலும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார்.
இந்நிலையில், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பி.கல்யாணசுந்தரம் என்பவர், சிறைத் துறை தலைவர் அலுவலகம், கவர்னர் அலுவலகம் ஆகியவற்றுக்கு, அக்., 24ல் அனுப்பிய மனு:
புழல் மத்திய சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்தவர்கள்; சந்திக்க மனு கொடுத்தவர்கள் விபரம்
அரசு ஊழியர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால், அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவார். ஆனால், செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என்பதற்கான சட்ட வழிமுறை விபரம்
புழல் சிறையில், விசாரணை கைதி எண் ஒதுக்கப்பட்ட நிலையில், அவருக்கு அமைச்சருக்கான ஊதியம் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதற்கான சட்ட வழிமுறை குறித்த விபரம்
செந்தில் பாலாஜி கைது தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விபரம் ஆகிய தகவல்கள் தேவை.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டது.<br><br>பதில் கிடைக்கும்
என் மனுவில் கோரிய விபரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் வழங்குமாறு, சிறைத் துறை தலைவர் அலுவலக பொது தகவல் அலுவலர், புழல் மத்திய சிறையின் பொது தகவல் அலுவலருக்கு பரிந்துரைத்துள்ளார்.
மனுவில் கோரப்பட்டுள்ள தகவல்களை உரிய முறையில் அளிக்குமாறு, கவர்னர் அலுவலக சார்பு செயலர், மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு பரிந்துரைத்துஉள்ளார். இதற்கான கடிதம் மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.