குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபரை வரவேற்க இந்தியா எதிர்நோக்குகிறது
23 மார்கழி 2023 சனி 01:35 | பார்வைகள் : 2200
இந்திய குடியரசு தினவிழா ஆண்டுதோறும் ஜனவரி 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளில் ஆண்டுதோறும் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.
அந்தவகையில் கடந்த ஜனவரி 26-ந்தேதி நடந்த கொண்டாட்டங்களில் எகிப்து அதிபர் அப்துல் பட்டா எல்-சிசி கலந்து கொண்டார். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு கொண்டாட்டங்களில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்கவில்லை. முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் அப்போதைய பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ பங்கேற்றார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் தன்னால் ஜனவரி மாதம் இந்தியா வர இயலாது என அவர் கூறியுள்ளார். உள்நாட்டு அலுவல்கள் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீதான அமெரிக்காவின் கவனம் அதிகரிப்பு போன்றவை காரணமாக அவரால் இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. இந்தியாவின் அழைப்பை ஏற்று குடியரசு தினவிழாவில் பங்கேற்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சிறப்பு விருந்தினராக வரவேற்க இந்தியா எதிர்நோக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "எனது அன்பு நண்பர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், 75வது குடியரசு தினத்தில் தலைமை விருந்தினராக உங்களை வரவேற்பதில் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களில் பகிரப்பட்ட நம்பிக்கையையும் கொண்டாடுவோம்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இந்தியா-பிரான்ஸ் இடையேயான உறவுகள் சமீப காலமாக பலப்பட்டு வருகிறது. பாதுகாப்பு, பசுமை எரிசக்தி, வர்த்தகம், முதலீடு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பும் அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கடந்த ஜூலை மாதம் நடந்த ராணுவ அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பிரான்சில் இருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்புதலையும் அதே மாதத்தில் ராணுவ அமைச்சகம் வழங்கி இருந்தது.
இந்த சூழலில் பிரான்ஸ் அதிபருக்கு இந்தியா அழைப்பு விடுத்திருக்கிறது. இதில் பங்கேற்பதன் மூலம் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் 6-வது பிரான்ஸ் தலைவர் என்ற பெருமையை மேக்ரான் பெற உள்ளார்.