Paristamil Navigation Paristamil advert login

செலவு செய்த ரூ.4,000 கோடிக்கு கணக்கு எங்கே?

செலவு செய்த ரூ.4,000 கோடிக்கு கணக்கு எங்கே?

23 மார்கழி 2023 சனி 03:47 | பார்வைகள் : 1730

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, மத்திய அரசின் படகுகள், ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டு மிக  துரிதமாக மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மழைக்கு முன்பாகவே, 900 கோடி ரூபாய் நிதியும் தரப்பட்டு  விட்டது. வானிலை ஆய்வு மையமும் முன்கூட்டியே எச்சரிக்கை அளித்துவிட்ட நிலையில், மத்திய அரசை குறை  கூறுவது சரியானது அல்ல. சென்னைக்காக தந்த, 4,000 கோடி ரூபாய் திட்டத்திற்கான கணக்கு என்னானது?'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என, குறை கூறப்பட்டது.

இந்நிலையில், புதுடில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, தமிழக வெள்ள நிலவரம் குறித்து அவர், 'பாயின்ட் டு பாயின்ட்' கேள்வி எழுப்பினார். அதன் விபரம்:

கடந்த 18ல், தென்மாவட்டங்களில் கனமழை செய்தி கேட்டதுமே பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து நிலவரங்களை நேரில் விளக்கினேன். பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், மத்திய அரசின் சார்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

உடனடியாக தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் அனுப்பப்பட்டதோடு, கூடுதல் உதவிகளும் செய்யும்படி அன்றைக்கே உத்தரவிடப்பட்டது. படகுகள், ஹெலிகாப்டர்கள் என, அனைத்தும் சென்றடைந்தன.

கடந்த 21ம் தேதி வரை, மத்திய அரசால் 42,290 பேர் மீட்கப்பட்டனர். இதுவரையில், 31 பேர் உயிரிழந்துள்ளது மிகவும் கவலையளிக்கிறது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில், பேருந்து வசதிகள் செய்து தரப்பட்டு, 800 பேர் மீட்கப்பட்டனர்.

மொத்தம் ஒன்பது ஹெலிகாப்டர்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ஒவ்வொன்றும் இடைவிடாமல் பல முறை இயக்கப்பட்டு, பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.

வெள்ள நிலைமைகள் சீரடையும் முன்பே, அதாவது, 19 அன்று மாலையே மத்திய அமைச்சகங்களின் ஒருங்கிணைப்பு குழு அங்கு சென்றுவிட்டது.கேரளாவின் திருவனந்த புரம் மற்றும் நீலகிரியின் வெலிங்டன் பகுதிகளில் இருந்து, மத்திய வீரர்கள் அனுப்பப்பட்டு, கடற்படையின் ஜெமினி படகுகளும் களமிறக்கப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் கர்ப்பிணி மற்றும் குழந்தை உட்பட பலர் விமானப்படை ஹெலிகாப்டர் வாயிலாக மீட்கப்பட்டனர்.

காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு விரைந்து செயல்பட்டதால் தான், நிறைய பேரை காப்பாற்ற முடிந்தது. ஏற்கனவே கூறியபடி, மாநில பேரிடர் நிதிக்கான மத்திய அரசின் பங்களிப்பான, 900 கோடி ரூபாயைக்கூட, மழை வருவதற்கு முன்பே தந்துவிட்டோம்.

முதல் தவணையான 450 கோடி ரூபாய், 'மிக்ஜாம்' புயலுக்கு முன்பாகவே தரப்பட்டு விட்டது. மீதமுள்ள தவணையான, 450 கோடி ரூபாய், தென் மாவட்ட வெள்ளத்துக்கு முன்பாக டிச., 12ல் அளிக்கப்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையம், 12ம் தேதி, மிக கனமழை பெய்யும் என்ற தகவலை தந்துவிட்டது. அத்துடன் நிற்காமல், ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் முன்பாகவே தகவல்கள் தரப்பட்டன.  ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை மழையின் அளவு, மழை எங்கு கொட்டப் போகிறது என்ற எச்சரிக்கைகளை அறிவித்தபடியே இருந்தது.

மிக நவீன வசதிகளைக் கொண்ட அந்த மையம், முன்கூட்டியே தகவல்களை தந்தது என்ற உண்மையை சிலர் காது கொடுத்து கேட்க மறுக்கின்றனர். தமிழகத்துக்கு என்ன தேவை என்றாலும், உடனடியாக செய்யும்படி பிரதமரும், உள்துறை அமைச்சரும், என் கண் எதிரிலேயே உத்தரவுகளை பிறப்பித்தனர்.

வானிலை மையம் மீது குற்றம் சொல்வற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள், உடனடியாக அந்த மாவட்டங்களுக்கு சென்றனரா? மத்திய மீட்புபடை செல்லும் வரை, யாருமே அங்கு செல்லவில்லையே?

சென்னைக்கான, 4,000 கோடி ரூபாய் திட்டத்தில், '92 சதவீதம் வரையில் செலவு செய்துவிட்டோம். என்ன மழை வந்தாலும் ஒன்றும் ஆகாது' என கூறிய தமிழக அமைச்சர், 'மிக்ஜாம்' புயல் வந்த பிறகு, '42 சதவீதம் மட்டும்தான் செலவு செய்துள்ளோம்' என கூறுகிறாரே... அதற்கு என்ன அர்த்தம்? இங்கே ஏன் எண்கள் மாறுகின்றன?

'வானிலை மையம், 'இன்ச் பை இன்ச்' தகவல் தந்திருந்தால் நாங்கள் மிகச்சரியாக செயல்பட்டிருப்போம்' என்கிறீர்களே? சென்னைக்காக தந்த, 4,000 கோடி ரூபாய்க்கு, சரியா கணக்கு சொன்னீர்களா அய்யா?

நீங்கள் சொன்ன, 92 சதவீதம் என்பது, மழைக்கு பிறகு, 42 சதவீதமாக மாறியது எப்படி? 4,000 கோடி ரூபாயில் 42 சதவீதம் மட்டும் செலவு செய்துவிட்டு, 'இன்ச் பை இன்ச்' மழை அளவு கேட்பீர்களா? முன்கூட்டியே தகவல் தர வேண்டுமென கேட்கும் நீங்கள், ஐந்து நாட்களுக்கு முன் எச்சரிக்கை தரப்பட்டதை இல்லை என்பீர்களா?

கடந்த, 2015 வெள்ளத்திலிருந்து பாடம் படித்திருந்தால், சென்னை அம்பத்துார், இன்று வெள்ளத்தில் மூழ்கியிருக்காது. மத்திய அரசு தந்த பணத்தை சரியாக பயன்படுத்தியிருந்தால், சென்னைக்கு பாதிப்பு வந்திருக்காது.

மழைக்கு முன் ஒரு கணக்கு; பிறகு ஒரு கணக்கு என்றால், எதை நம்புவது? 42 சதவீதம் செலவானது என்பதும்கூட உண்மைதானா என்பது என் சந்தேகம்.

தேசிய பேரிடர் என அறிவிக்கும் மரபே மத்திய அரசிடம் இல்லை. எனவே இப்போதைய வெள்ளத்தை பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவில்லை என குறை கூறுவது சரியல்ல. மாநில அரசு துரிதமாக செயல்படுவதற்கு முன்பாகவே, மத்திய அரசின் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி விட்டன என்பதே உண்மை.இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வரின் முன்னுரிமை

இண்டியா கூட்டணிதான்'செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது:முன்கூட்டியே தகவல் சொல்லவில்லை என எங்களைக் குறை கூறும் தமிழக முதல்வர், நாங்கள் மீட்பு படைகளை இங்கிருந்து அனுப்பும்போது எங்கிருந்தார்? 'மக்கள் திணறுகின்றனர்; மத்திய அரசே, எனக்கு பேரிடர் மீட்பு உதவிகளை அனுப்புங்கள். நான் களத்தில் நிற்கிறேன்' என கேட்பதை விட்டுவிட்டு, அவர் டில்லியில்தானே இருந்தார்? மூன்று நாட்களுக்கு பின், நெல்லை சென்று எங்களை குறை கூறுவாரேயானால், அதையும் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். நாள் முழுக்க டில்லியில் இருந்துவிட்டு, 'என் கூட்டம் முடிந்தபிறகு, போகிற போக்கில் உங்களை சந்திக்கிறேன்' என கேட்டபோது, தமிழக மக்களுக்காக, அந்த நள்ளிரவிலும் பிரதமர் நேரம் தந்தார். இதிலிருந்து, முதல்வரின் முன்னுரிமை எது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பேரிடர் நேரத்தில் தமிழக முதல்வர், 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் இருந்தார். 'மக்களோடுதான் இருப்பேன். என் மக்கள், என் மண்ணோடு தான் இருப்பேன்' என கூறாத அவர், மத்திய அரசை குறை கூறுகிறார். ஆனால், நாங்கள் அவருக்கு முன்பே உதவத் துவங்கிவிட்டோம் என்பதே உண்மை.இவ்வாறு அவர் கூறினார்.

வாயை விடுவது நல்லதல்ல

அமைச்சர் நிர்மலா மேலும் கூறியதாவது:'அப்பன் வீட்டு பணமா?' என, தமிழக அமைச்சர் உதயநிதி கேட்கிறார். அதுபோல பேசுவதுதான் அவரது பாஷையே. சனாதனத்தை அழிப்போம் ஒழிப்போம் என்றெல்லாம் பேசியவர் அல்லவா... எப்போதும் அப்படித்தான் அவர் பேச்சும் இருக்கும். ஆனால், 'அவங்க அப்பன் வீட்டு சொத்த வச்சு பதவியை அனுபவிச்சுட்டு இருக்காரா?' என நாங்களும் கூற முடியும்தானே! 'இந்த அப்பன் வீடு, உங்க ஆத்தாவா' என்ற பேச்செல்லாம், அரசியலில் நல்லது இல்லை. அவரும், அந்த குடும்பமும், அவர் அரசியலில் முன்னேற வேண்டுமென விரும்புகிறபோது, இதுபோன்ற பேச்சுக்கள் ஏற்புடையதல்ல. அவரது தாத்தா, எப்பேற்பட்ட தமிழறிஞர். பதவிக்கேற்ப, வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். மத்திய அரசு, முன்கூட்டியே தந்த, 900 கோடி ரூபாய்கூட, எங்க அப்பன் சொத்து என்றோ, உங்க அப்பன் சொத்து என்றோ கூற மாட்டேன். உங்க அப்பா, பிரதமரை, இப்போதுதான் பார்த்துவிட்டு வந்துள்ளார்; வரவேண்டியது வரும். எனவே, வார்த்தைகளை விடாமல், வாயை வைத்துக் கொண்டு பொறுமையாய் இருப்பது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.

வங்கியில் போடாதது ஏன்?

அமைச்சர் நிர்மலாவின் அதிரடி குற்றச்சாட்டில் அவர் மேலும் கூறியதாவது:வெள்ள நிவாரண உதவித் தொகையாக, 6,000 ரூபாய் தருவது மாநில அரசின் இஷ்டம். ஆனால், அது மக்களுடைய பணம். 'அப்பன் வீட்டு சொத்தா?' என கேட்பவர்கள், மக்களின் வங்கிக் கணக்கு வாயிலாக அதை சேர்ப்பித்து இருக்கலாமே? நேரடியாக தந்தது ஏன்?நிஜமாகவே பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அந்த பணம் சென்றடைகிறதா என எப்படி தெரியும்? பிரதமர், அனைவருக்கும் வங்கிக் கணக்கு துவங்கி தந்துள்ள நிலையில், ஏன் ரொக்கமாக தர வேண்டும்? அரசு பணம்தானே; என் அப்பன் சொத்து இல்லையே... உங்க அப்பன் சொத்தும் இல்லையே? அப்போ, வங்கியில் போடவேண்டியதுதானே? அந்த ரூபாயை சீட்டு விளையாட்டில் விரித்து காட்டுவதுபோல புகைப்படம் எடுத்து போடுவதைவிட, வங்கியில் போட்டால், பிறகு யார் வேண்டுமானாலும், சரிபார்த்துக் கொள்ளலாம்தானே!இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய  பேரிடராகஅறிவிக்காதது ஏன்?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 2004ல் சுனாமி தாக்கியது. அப்போது மத்தியில் தி.மு.க., அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் ஆட்சியில் இருந்தது; சுனாமி பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை.கடந்த 2013 ஆகஸ்டில் பார்லி.,யில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்த முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அளித்த பதிலில் கூட, 'இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்கும் எந்த வழிகாட்டு நெறிமுறைகளும்
இல்லை' என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016 மே மாதம் லோக்சபாவில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அப்போது மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு அளித்த பதிலிலும், தேசிய பேரிடராக அறிவிக்க முடியாததற்கான காரணங்களையும் தெளிவு படுத்தியுள்ளார்.இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்