கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வர காரணம் என்ன தெரியுமா..?
23 மார்கழி 2023 சனி 15:09 | பார்வைகள் : 1935
திருமண வாழ்க்கை என்றாலும், காதல் உறவு என்றாலும் அல்லது ஆண், பெண் இடையிலான நட்பு என்றாலும் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு கண்ணோட்டங்கள் இருக்கும் என்ற நிலையில், கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும் என்றால் ஆரோக்கியமான விவாதங்கள் மிக அவசியமாகும்.
கருத்து வேற்றுமை ஏற்படுகின்ற சமயங்களில் அதுகுறித்து விவாதம் செய்து சமரசத் தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதை செய்யத் தவறும் பட்சத்தில் உங்கள் பந்தத்தில் கசப்புகள் ஏற்படத் தொடங்கி பின்னர் அது பிரிவாக மாறக்கூடும்.
இதுகுறித்து குடும்ப நல ஆலோசகர் ஜூலியா வுட்ஸ் கூறுகையில், “ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே குழப்பம் ஏற்படுகிறது என்பது மட்டும் பிரச்னைக்குரிய விஷயமல்ல. ஆனால், அதற்கு முறையாக தீர்வு காணப்படுவதில்லை என்பதுதான் பெரும் சவாலாக அமைகிறது.
தன் வாழ்க்கைத் துணையுடன் ஏற்படக் கூடிய பிரச்னையை யார்தான் சிக்கலுக்குரியதாக கருதுகின்றனர்? பிரச்னை என்னவென்றால், அதற்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆகவே தான் பிரச்னை பெரியதாக மாறுகிறது’’ என்று தெரிவித்தார்.
அதே சமயம், ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்படுகிறது என்பதை கீழ்காணும் அறிகுறிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்மறையான உணர்ச்சிகள் : உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஏதேனும் வாக்குவாதம் ஏற்படும் சமயங்களில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால், அந்த சிந்தனையில் இருந்து விடுபட முடியாமல் நீங்கள் தவித்து நிற்கிறீர்கள் என்றால் அடுத்து நல்ல உறவு முறையில் உங்களால் ஈடுபட முடியாமல் போகலாம்.
குழப்பம் : ஒரு பிரச்னை ஏற்பட்ட பிறகு, அந்த சூழலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் சிலர் குழப்பம் அடைவார்கள். குழப்பங்கள் ஏற்படுவது பொதுவான காரியம்தான். கூறவரும் காரியத்தை சரியாக கூறாமல் இருப்பதும் குழப்பத்திற்கு காரணமாக அமையலாம். பிரச்னைகளுக்குப் பிறகும் தம்பதியர்கள் ஆரோக்கியமான வகையில் விவாதங்களை முன்னெடுப்பது அவசியமாகும்.
தவறுகளை கண்டறிவது : பொதுவாக ஒரு சண்டைக்குப் பிறகு எது சண்டைக்கு காரணமாக அமைந்தது என்று கவனிக்க வேண்டும். இவ்வாறு பரிசீலனை செய்யும்போது நம் பக்கம் உள்ள தவறுக்கு என்ன காரணம் என்று நமக்கு தெரிய வரும். அதற்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த முறை அதே தவறை செய்யக் கூடாது என்ற எண்ணம் வரும்.
நம்பிக்கை இழப்பது : நடந்த தவறுகளை மறந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர கற்றுக்கொள்ள வேண்டும். நடந்த பிரச்னையை மனதில் வைத்துக் கொண்டு மிகுந்த கவலை அடைவதும், நம்பிக்கை இழப்பதும் அடுத்தக்கட்ட வாழ்விற்கு நல்லதல்ல. குறிப்பாக, வாழ்க்கையில் அடுத்து புத்துணர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு நகர வேண்டும்.