Paristamil Navigation Paristamil advert login

காணாமல் போன அருவி.. பூசணிக்காயால் மறைந்து போனதா?

காணாமல் போன அருவி.. பூசணிக்காயால் மறைந்து போனதா?

23 மார்கழி 2023 சனி 18:39 | பார்வைகள் : 2457


ஒரு பெரிய மலை, அதன் அருகில் கொட்டும் அழகிய அருவி. அருவியின் செழிப்பில் பூத்து கொழிக்கும் நன்செய், புன்செய். அதை நம்பி வாழும் கிராமம். செழிப்பாக இருந்த கிராமத்தில் திடீரென வறட்சி. எங்குமே நீர் இல்லை. மலையில் இருந்து கொட்டிய அருவி வற்றி போக, கிராமமே பஞ்சத்தில் வாடியது. பல மைல்கள் கடந்து நீர் எடுத்து வரும் சோகம் சூழ்ந்தது.

நல்ல நீளமான கரு கருவான தலை மூடியை கொண்ட பெண் தான் ஹாசினி. மிகவும் அழகான பெண்ணும் கூட. அவளும், அவளது அம்மாவும் ஒரு குடிசையில் தனியாக வாழ்ந்து வருகிறாள். அவர்கள் வருமானத்திற்காக ஆடு வளர்த்து வருகிறார்கள். அந்த ஆடுகளை பராமரிக்கும் பணி ஹாசினியோடதுதான். முன்பெல்லாம் வீடுகளின் அருகிலேயே அதற்கான தீனி கிடைத்தது. மழையும் வராததால் மலை மேல் ஏறி ஆடுகளை மேய்க்க செல்வாள் ஹாசினி.

அன்று மலை ஏறி ஆடுகளை மேய்ப்பதற்கு சென்ற ஹாசினி, பாதி வழியில் சோர்ந்து போனாள். அப்போது அவள் கண்களில் ஒரே ஒரு மரம் பட்டது. அதன் அருகில் அமர்ந்தாள். அந்த மரத்தில் ஒரு கொடி மிகவும் பசுமையாக இருந்தது. அதை பார்த்ததும் தனது ஆடுகளுக்காக பறிக்க தொடங்கினாள். ஆனால் அவளால் அந்த இலைகளை பறிக்க முடியவில்லை. அவளது முழு சக்தியையும் பயன்படுத்தி அந்த கொடியை இழுத்தாள். வெளியே வந்து விழுந்தது பாருங்க அவ்ளோ பெரிய பூசணிக்காய். அதோடு அவள் முகத்தில் வேகமாக நீர் வந்து அடித்தது. அது ஒரு ஊற்று, அந்த நீர் மிகவும் சுவையாக இருந்தது.

ஹாசினி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள். அவளது கிராமத்திற்கு விடிவு காலம் பிறந்ததை எண்ணி வேகமாக மலையிலிருந்து கீழே இறங்கினாள். அப்போது திடிரென சூறாவளி போன்று ஒன்று அவளை அடித்து இழுத்து சென்றது. அவளை ஒரு பெரிய குளத்தில் நிறுத்தியது. அதை பார்த்ததும் இப்படி ஒரு குளம் இங்கு இருக்கிறதா?, இது போதுமே எங்கள் கிராமம் செழிப்பாக மாறிவிடுமே என எண்ணினாள்.

அதற்குள் ஒரு கொடூரமான உருவம் அவள் முன்னே தோன்றியது. அது பார்ப்பதற்கே கருப்பான ஒரு நிழல் போன்ற உருவமாக இருந்தது, கை விரல்கள் என பார்ப்பதற்க்கு கொடூரமான ஒன்றாக தெரிந்தது. ஹாசினி பயந்தாலும் வெளியே கட்டி கொள்ளாமல் நின்றாள். அப்போது அந்த உருவம் இங்கே பார்த்த இந்த குளத்தை பற்றியோ, அந்த ஊற்றை பற்றியோ நீ கிராமத்தில் சொன்னால் அடுத்த நொடி இந்த சூறாவளி உன்னை இங்கே அழைத்து வந்துவிடும். பின்பு இதே குளத்தில் உன்னை மூழ்கடித்து கொலை செய்துவிடுவேன் என மிரட்டியது.

மீண்டும் பயங்கர சூறாவளி போன்று தோன்றி அவளை கிராமத்தில் விட்டது. அதன் பிறகு அவள் அந்த மலை பக்கம் செல்லவில்லை. ஒவ்வொரு முறையும் தண்ணீருக்காக அவளது கிராமம் படும் சிரமத்தை அவளால் பார்க்கவும் முடியவில்லை. அவளது பக்கத்து வீட்டில் இருக்கும் அக்கா ஒருவர் தனது சிறு குழந்தைகளை தனியாக விட்டு தண்ணீர் எடுக்க தொலைவுக்கு சென்று திரும்பும் வரை அந்த குழந்தைகள் அழுது கொண்டே இருக்கின்றன.

இந்த காட்சிகள் அவளை உருக்கியது. ஒருநாள் அந்த அக்கா உடல்நிலை சரியில்லாமல் படுக்க அவருக்கு கொடுக்க தண்ணீர் இல்லாமல் போகவே ஒரு முடிவுக்கு வந்தாள் ஹாசினி. தனது உயிர் போனாலும் பரவாயில்லை, மக்களுக்கு நீர் வேண்டும் என்று அன்னைக்கு நடந்தவற்றை தனது கிராம மக்களை கூட்டி சொன்னாள் . என்னை நம்பி சிலர் வந்தால் போதும், நீரை திறந்த பிறகு நீங்கள் அங்கிருந்து சென்று விடுங்கள். நான் அந்த கொடிய உருவத்தை பார்த்து கொள்கிறேன் என்றாள்.

கூட்டத்தில் ஒருவன், உங்கள் உயிரையும் விட வேண்டாம் நான் ஒரு யோசனை சொல்கிறேன் என ஒரு திட்டத்தை கூறினான். அதன்படி ஹாசினி தனது நீளமான கூந்தலை மொட்டையடித்தாள். ஆண் போல வேடம் தரித்தாள். ஒரு 10 பேர் மலையை நோக்கி நடந்தார்கள். அவர்களுடன் ஒரு மர பொம்மையை எடுத்து சென்றார்கள். அந்த மரத்தை அடைந்தார்கள். அதேபோல மரத்தை சுற்றி கொடி படர்ந்து இருந்தது. அதை அவர்களை இழுக்க சொன்னாள் ஹாசினி. இழுத்ததும் பெரிய பெரிய பூசணிக்காய்கள் பூமிக்கடியில் இருந்து வெளியில் வந்தன.

அதோடு ஒரு பெரிய நீரூற்று கரை புரண்டு ஓடியது. அந்த நீர் மிகவும் சுவையாக இருந்தது. மக்கள் அதிரிச்சியில் உறைந்தார்கள். ஏன்னெனில் பின்னாடியே பயங்கர சூறாவளி வந்தது. அவர்கள் கையில் இருந்த மர பொம்மைக்கு ஹாசினியின் நீள கூந்தலை ஏற்கனவே அணிவித்திருந்தார்கள். 

அந்த சூறாவளி அந்த மர பொம்மையை ஹாசினி என நினைத்து அந்த உருவம் இருக்கும் குளத்திற்கு கொண்டு சேர்த்தது. சற்றும் யோசிக்காத அந்த உருவம் அதை ஹாசினி என எண்ணி அந்த குளத்தில் ஆழ்த்தியது. ஆனால் ஹாசினியோ தனது கிராம மக்களுடன் அந்த நீரூற்றை அருந்தி மகிழ்ந்தாள்.

அவர்கள் கிராமும் பழைய நிலைக்கு மெல்ல திரும்பியது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்