போர் நிறுத்தம் தொடர்பில் தாம் கோரவில்லை - ஜோ பைடன் வெளிப்படை
24 மார்கழி 2023 ஞாயிறு 10:36 | பார்வைகள் : 3908
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் காஸா பகுதியில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கேட்டுக்கொண்டதாக வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.
காஸா மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
இதில், மனிதாபிமான உதவி நடவடிக்கைக்கு ஆதரவளிப்பவர்கள் உட்பட பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி பைடன் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தொடர்ந்து சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் விளக்கியதாக வெள்ளைமாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் நீண்ட நேரம் பேசியதாகவும், அது ஒரு தனிப்பட்ட உரையாடல் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் போர் நிறுத்தம் தொடர்பில் தாம் கோரவில்லை என்றும் ஜோ பைடன் பதில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.