60 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு : பிரதமர் மோடிக்கு அமித்ஷா பாராட்டு
24 மார்கழி 2023 ஞாயிறு 11:37 | பார்வைகள் : 2407
தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம் 60 கோடி மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டுள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
தெருவோரக் கடை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தில் பயன் அடைந்த மக்களை அமித்ஷா சந்தித்தார். பின்னர் அவர் கூறியதாவது: தற்சார்பு இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த மிகப் பெரிய கனவு பிரதமர் மோடிக்கு இருக்கிறது. அது மிகப் பெரிய கனவு. விண்வெளி மற்றும் ராணுவமும் அதில் அடக்கம்.
விண்வெளி, ஆராய்ச்சி, மேம்பாடு, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். ஏழைகளின் நலனில் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம் 60 கோடி மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டுள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் நாடு இந்தியா என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எல்லோருக்கும் கோவிட் தடுப்பூசி எவ்வித தடங்கலும் இன்றி கிடைக்கச் செய்தவர் பிரதமர் மோடி. கொரோனா தடுப்பூசி நாட்டு மக்களுக்கு இலவசமாகப் போடப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.