Paristamil Navigation Paristamil advert login

மறு கன்னம் காட்ட மாட்டோம்! வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமை

மறு கன்னம் காட்ட மாட்டோம்! வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமை

24 மார்கழி 2023 ஞாயிறு 16:22 | பார்வைகள் : 1628


எல்லையை தாண்டி பயங்கரவாத சம்பவங்கள் நடக்கும்போது, இந்த கன்னத்திலும் தாக்குங்கள் என, மறு கன்னத்தை காட்டிய காலம் முடிந்து விட்டது. எதிர் தாக்குதல் நடத்துவதே தற்போதைய தேவை. பயங்கரவாத சம்பவங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையுடன் குறிப்பிட்டார்.

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நான்கு ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். பாதுகாப்பு படையினருடன் கடும் சண்டையில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், இரண்டு வீரர்களின் உடல்களை சேதப்படுத்தி, ஆயுதங்களை பறித்துச் சென்றனர்.பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரில், தேசிய பாதுகாப்பு பல்கலையின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிருபர்களிடம் கூறியதாவது:  

நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தபோது, அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத தாக்குதல் என்பது, கூடுதலாக ஒட்டிக் கொண்டுவிட்டது. சுதந்திரம் பெற்ற முதல் நாளில் இருந்து, இதை நாம் சந்தித்து வருகிறோம். இந்த விஷயத்தில் மிகவும் தெளிவான பார்வை தேவை.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008 நவ., 26ல் நடந்த பயங்கரவாத தாக்குதல், நம் நாட்டு மக்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பயங்கரவாதம் தொடர்பான கண்ணோட்டம் மாறியது.அந்த பயங்கரவாத தாக்குதல் நடக்கும் வரை, எல்லையை தாண்டிய பயங்கரவாதம் குறித்து மக்களிடையே குழப்பமான நிலையே இருந்தது. அது, ஜம்மு - காஷ்மீருக்கான பிரச்னை என்றே கருதி வந்தனர்.

தற்போதைய நம்முடைய தேவை, பயங்கரவாதத்துக்கு தகுந்த பதிலடி கொடுப்பதே. ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்டுவதே புத்திசாலித்தனம் என்று சிலர் கூறி வந்தனர். ஆனால், அது நம் நாட்டு மக்களின் எண்ண ஓட்டம் அல்ல. நாங்கள், மறு கன்னத்தை காட்ட மாட்டோம்; தகுந்த பதிலடியை கொடுப்போம்.

முன்பு இருந்த அந்த புத்திசாலித்தனத்தை, எந்த வகையிலும் சிறந்ததாக நாங்கள் கருதவில்லை. எல்லையை தாண்டி, யாராவது பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டால், உடனடியாக அதற்கு பதிலடி தருவோம்; அதற்கான விலையை அவர்களை கொடுக்க வைப்போம். நம்மிடையே இருக்கும் போட்டியில், பயங்கரவாதம் இருக்கக் கூடாது. விளையாட்டு, போட்டிக்கென சில விதிமுறைகள் உள்ளன. அது மீறப்படும்போது, அதை ஏற்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

பிரிவினைவாதத்துக்கு இடமளிக்க கூடாது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், நேவார்க் நகரில் ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் என்ற ஹிந்து கோவில் உள்ளது. இந்த கோவிலின் அறிவிப்பு பலகையில் நேற்று கருப்பு பெயின்டால், பிரதமர் மோடியை அவமதிக்கும் வாசகங்களையும், காலிஸ்தான் என்றும் கிறுக்கி இருந்தனர். உயிரிழந்த காலிஸ்தான் பயங்கரவாதிகளை தியாகிகள் என புகழும் வாசகங்களையும், கோவில் சுற்றுச்சுவரில் எழுதி வைத்துள்ளனர்.

இதற்கு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துாதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க, அமெரிக்க அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:

இது தீவிரமான பிரச்னை. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகளை, தங்கள் நாடுகளில் இருந்து இயங்க, எந்த நாடும் இடமளிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் அந்த நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள நம் துாதரகம் உடனடியாக புகார் அளித்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்