தென்கிழக்கு ஆசியாவிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை!
25 மார்கழி 2023 திங்கள் 12:33 | பார்வைகள் : 3061
கண்காணிப்புக்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளை உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா மற்றும் அதன் புதிய மாறுபாடான ஜே.என்.1 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட சுவாச நோய்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தற்போது மீண்டும் பரவிவரும் நிலையில் ஜே.என்.1 மாறுபட்டால் ஆபத்து குறைவாக இருந்தாலும் இந்த வைரஸ்களின் பரிணாமத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளது.
இதற்காக, நாடுகள் கண்காணிப்பு மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தரவு பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
சமீபத்திய வாரங்களில், ஜே.என்.1 மாறுபாடு பல நாடுகளில் பதிவாகியுள்ளது.
மேலும் அதன் பரவல் உலகளவில் வேகமாக அதிகரித்து வருகிறது என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
விடுமுறைக் காலங்களில் மேற்கொள்ளும் பயணங்கள் மற்றும் ஒன்று கூடலின்போது காற்றோட்டம் குறைவாக இருப்பதால், சுவாச நோய்களை உண்டாக்கும் வைரஸ்கள் பரவக்கூடும் என்றும் கூறியுள்ளது.
ஆகவே அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நோய் தொற்று மற்றும் உடல்நிலையில் மாற்றம் இருந்தால் மருத்துவ சிகிச்சையை நாட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.