வாஜ்பாய் ஒரு சிறந்த தலைவர்: நிதீஷ்குமார் பேச்சு; கூட்டணியில் சலசலப்பு
25 மார்கழி 2023 திங்கள் 15:12 | பார்வைகள் : 2168
வாஜ்பாய் ஒரு சிறந்த தலைவர் என பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் பேசினார்.
நிதிஷ்குமார் பேச்சால் இண்டியா கூட்டணியில் அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளில் அவரை பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் புகழ்ந்து பேசினார். அப்போது அவர், வாஜ்பாய் ஒரு சிறந்த தலைவர். அவரது ஆட்சி காலத்தில் நான் மத்திய அமைச்சராக இருந்தேன். அவர் எனக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தவர்.
பீஹார் முதல்வராக நான் பொறுப்பேற்றதில் வாஜ்பாயிக்கு முக்கிய பங்கு உண்டு. பாரபட்சம் இன்றி ஆட்சி செய்தார். என் வாழ்நாளில் அவரை மறக்க முடியாது. வாஜ்பாயின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன்''. இவ்வாறு அவர் பேசினார்.
நிருபர்கள் கேள்வி
அப்படி என்றால், அரசியலில் வாஜ்பாயின் கொள்கையை ஏற்கிறார்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு நிதீஷ் குமார், ‛‛ வாஜ்பாய் மிக சிறந்த நிர்வாகி. அவர் ஆட்சியில் மக்களுக்கு பல நன்மைகள் நடந்துள்ளன. அவருடன் நானும் இணைந்து பல பணிகளை செய்துள்ளேன்'' என பதில் அளித்தார்.
சலசலப்பு
பிரதமர் வேட்பாளர் துவங்கி, சனாதனம் ஆதரவு, எதிர்ப்பு, ஹிந்தி சர்ச்சை என இண்டியா கூட்டணியில் அடுத்தடுத்து சர்ச்சை எழுந்து வருகிறது. இந்நிலையில் வாஜ்பாய் குறித்து நிதீஷ்குமார் புகழ்ந்து பேசியது இண்டியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.