இன்று அ.தி.மு.க.,பொதுக்குழு: மீண்டும் பா.ஜ., உறவு அறிவிப்பாரா பழனிசாமி?
26 மார்கழி 2023 செவ்வாய் 10:16 | பார்வைகள் : 1956
பா.ஜ., உடன் கூட்டணி இல்லை என்று சொல்லி, சில மாதங்களுக்கு முன் ஒதுங்கிய அ.தி.மு.க., தரப்பில், திடுமென மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, மீண்டும் பா.ஜ.,வோடு கூட்டணிக்கு முயற்சிக் கிறார்.
இதற்காக, பா.ஜ., தேசிய செயலர் சந்தோஷுடன், கட்சியின் மூத்த தலைவர்கள் வாயிலாக தொடர்பு கொண்டிருக்கிறார் என்று, சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், அக்கட்சியின் மூத்த தலைவர்களும், தொண்டர்களும் குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அ.தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மூன்று முக்கிய மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெறும் என, பழனிசாமி எதிர்பார்க்கவில்லை.
காங்., தான் வெற்றி பெறும் என, வடமாநில தலைவர்கள் சிலர் கூறியதை, கடைசி வரை நம்பினார். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, பா.ஜ., மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றதும், அ.தி.மு.க., தரப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., இல்லாமல் போட்டியிட்டு, ஓரளவுக்கு எம்.பி.,க்களை பெற்றாலும், மீண்டும் பா.ஜ.,வே மத்தியில் ஆட்சிக்கு வந்து விட்டால், அ.தி.மு.க., தலைவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இதனால், பா.ஜ.,வோடு இணக்கமான போக்கை மேற்கொள்ளலாமா என, அ.தி.மு.க., தரப்பில் நினைக்கின்றனர்.
இதையடுத்தே, பா.ஜ., தலைவர்களோடு பழனிசாமி தரப்பினர் பேசி வரும் செய்திகள் வெளியாகின்றன. அந்த தகவல்களை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை.
அதனால், இன்று நடக்கும் செயற்குழு கூட்டத்தில், இந்த விவகாரத்தில் பழனிசாமி தெளிவாக விளக்கமளித்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.