ஒன்பது ஆண்டில் ரூ.10.76 லட்சம் கோடி தமிழகத்திற்கு நிதி வழங்கிய மோடி அரசு
26 மார்கழி 2023 செவ்வாய் 12:18 | பார்வைகள் : 2430
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் நேற்றைய அறிக்கை: பிரதமர் மோடி, எப்போதும் தமிழக மக்களின் நலன்களையே மனதில் கொண்டுள்ளார். இதற்கு, கடந்த ஒன்பது ஆண்டுகளில் அவர் எடுத்த நடவடிக்கைகளே எடுத்துக்காட்டு.
கனமழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும், தமிழக அரசு அதை எதிர்கொள்ள தயாராகவில்லை. இதனால், மக்களின் கோபத்தை திசை திருப்ப, முதல்வர் ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வருகிறார்.
'யாஸ்' புயலின் போது, ஒடிசா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு, 1,000 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டதையும் குறிப்பிடவில்லை. இவை, பா.ஜ., ஆளும் மாநிலங்களா?
மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், 101 மருத்துவக் கல்லுாரிகளின் ஒரு பகுதியாக, குஜராத் ஐந்து மருத்துவக் கல்லுாரிகளையும்; தமிழகம், 11 கல்லுாரிகளையும் பெற்று உள்ளது.
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த ஒரு முறை மானியமாக, மத்திய அரசிடம் இருந்து தமிழகம், 868 கோடி ரூபாயும்; குஜராத், 304 கோடி ரூபாயும் பெற்றன. இவை, சில உதாரணங்கள் மட்டுமே.
கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 10.76 லட்சம் கோடி ரூபாயை அதிகார பகிர்வு, மானியங்கள், மத்திய அரசின் திட்டங்கள் என, பல்வேறு திட்டங்களுக்காக வழங்கியுள்ளது.
இது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் ஒன்பது ஆண்டுகளில் தமிழகம் பெற்றதை விட, மூன்று மடங்கு அதிகம்.
மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகம் அளித்த வரி தொகையை விட, இரு மடங்கு அதிகம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.