Paristamil Navigation Paristamil advert login

ஈரான்-சிரியா ராணுவ ஒருங்கிணைப்பாளர், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு

ஈரான்-சிரியா ராணுவ ஒருங்கிணைப்பாளர், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு

26 மார்கழி 2023 செவ்வாய் 07:05 | பார்வைகள் : 2909


கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், 80 நாட்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பினருக்கு உதவும் நாடுகளையும், அவர்களுக்கு உதவும் அமைப்புகளையும் எதிரியாக கருதும் இஸ்ரேலிய ராணுவ படை (IDF) சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு வெளியேயும் தாக்குதலை நடத்தியது.

இது குறித்து தொலைக்காட்சியில் அறிவித்த ஈரான் அரசு, "டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் ஜெய்னபியா (Zeinabiyah) மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானிய புரட்சி படை பிரிவை (Iran's Revolutionary Guard Corps) சேர்ந்த மூத்த ஆலோசகர் சையத் ராசி முசாவி (Sayyed Razi Mousavi) கொல்லப்பட்டார். 

ஆதிக்க மனப்பான்மை உடைய இஸ்ரேல் நடத்திய இந்த குற்ற செயலுக்கு அந்நாடு தகுந்த தண்டனையை பெறும்" என எச்சரித்துள்ளது.

முசாவி, ஈரானுக்கும் சிரியாவிற்கும் இடையே ராணுவ உறவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்.

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் நட்பு நாடுகளை ஒன்றுபடுத்தும் "ஆக்ஸிஸ் ஆஃப் ரெஸிஸ்டன்ஸ்" (Axis of Resistance) அமைப்பில் பலரை ஒன்றுபடுத்துவதில் முக்கிய பங்காற்றியவர்.

1980களின் தொடக்கத்திலிருந்து ஈரானுக்கும் சிரியாவிற்கும் இடையே புரட்சி படையின் நடவடிக்கைகளை நிர்வகிப்பதில் நீண்ட அனுபவம் உடையவர் முசாவி என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இஸ்ரேலின் டமாஸ்கஸ் தாக்குதல் மற்றும் அதன் தொடர்ச்சியாக முசாவி கொல்லப்பட்டதன் விளைவாக இஸ்ரேல்-ஹமாஸ் போர், மேலும் சில நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக பல உலக நாடுகள் அச்சம் தெரிவித்தன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்