இரண்டு மாதங்களாக தொடரும் யுத்தம்! - இஸ்ரேல் பிரதமருடன் உரையாடிய ஜனாதிபதி மக்ரோன்!
28 மார்கழி 2023 வியாழன் 07:00 | பார்வைகள் : 3290
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யஹுவுடன் தொலைபேசியூடாக உரையாடியுள்ளார். நேற்று டிசம்பர் 27, புதன்கிழமை இந்த உரையாடல் இடம்பெற்றது.
காஸா பகுதியில் யுத்தம் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், அப்பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை பிரான்ஸ் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இந்நிலையில், மேலும் பல பொருட்களை வழங்குவதற்கு அங்கு ஒரு நீண்ட ‘போர் நிறுத்தம்’ ஒன்றை வலியுறுத்தி இந்த உரையாடல் இடம்பெற்றது.
ஜோர்தான் நாட்டுடன் இணைந்து காஸா பகுதி மக்களுக்குத் தேவையான பல்வேறு அடைப்படைத் தேவைகளை பிரான்ஸ் வழங்க உள்ளது.
அதேவேளை, பிரான்ஸ் பல்வேறு மத்தியஸ்த நாடுகளுடன் இணைந்து ஹமாஸ் அமைப்பினரது தாக்குதலையும் நிறுத்துவதற்கு உறுதி கோரியுள்ளது.
பாலஸ்தீன மக்கள் மீதோ, மேற்குக்கரை குடியேற்ற மக்கள் மீதோ தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கேட்டுக்கொண்டதாக எலிசே மாளிகை குறிப்பிட்டுள்ளது.