ரஷ்யாவுடனான எல்லையை மூடும் பின்லாந்து...
29 கார்த்திகை 2023 புதன் 09:19 | பார்வைகள் : 3390
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 1.5 வருடத்தை நிறைவு செய்து உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கிய பிறகு, ரஷ்யாவின் அண்டை நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தன.
இதில் தற்போது பின்லாந்தின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நேட்டோ கூட்டமைப்பில் இணைந்துள்ளது.
ஸ்வீடன் நேட்டோவில் இணையும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கலப்பின மோதலின் கருவியாக புலம்பெயர்தலை ஆயுதமாக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ரஷ்யாவுடனான 1,300 கிலோ மீட்டர் எல்லைகளை மூடுவதாக பின்லாந்து அறிவித்துள்ளது.
சில வாரங்களாக சோமாலியா, சிரியா, ஈராக் ஆகிய பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிகளை ரஷ்யா அண்டை நாடுகளுக்குள் தள்ளுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவுடனான தனது எல்லைகளை மூட எஸ்டோனியா தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.