10 வயது சிறுமியின் உயிரை பறித்த மூளை உண்ணும் அமீபா
29 கார்த்திகை 2023 புதன் 10:16 | பார்வைகள் : 2884
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 10 வயதே ஆன சிறுமி மூளை உண்ணும் அமீபா காரணமாக உயிரிழந்த மிக மோசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஸ்டெபானியா வில்லமிசார் கோன்சாலஸ் எனும் 10 வயதே ஆன இந்த சிறுமி, பாலே நடனமும் பயின்று வருகிறாராம்.
இவர் குடும்பத்தினருடன் விடுமுறைக்குச் சென்ற போது, நீச்சல் குளத்தில் குளித்துள்ளார்.
அதன் பின்னர் சில நாட்களில் அவருக்குக் காது வலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.
இது சில நாட்களில் சரியாகிவிடவே, சாதாரண அலர்ஜியாக இருக்கும் என்று அவர்கள் நினைத்துள்ளனர்.
இரண்டு வாரங்களில் அவரது உடல்நிலை மோசமானதாக மாறியுள்ளது.
ஒரு கட்டத்தில் அவர் படுக்கையில் இருந்தே எழுந்திருக்க முடியாத சூழல் ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும், மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
நல்ல உடல்நிலையில் இருந்த அந்த சிறுமி திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் உயிரிழந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதையடுத்து அந்த சிறுமியின் மரணம் குறித்து மருத்துவர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் தான் அந்த சிறுமிக்கு அமீபிக் என்செபாலிடிஸ் என்ற பாதிப்பு இருந்தை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
மத்திய நரம்பு மண்டலத்தை நேரடியாக இந்த நோய் தாக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழக்க 95% வாய்ப்பு இருக்கிறது. இதை பொதுவாக "மூளையை உண்ணும் அமீபா" என்று குறிப்பிடுவார்கள்.