Paristamil Navigation Paristamil advert login

வெளிநாடு ஒன்றில் இருந்து 35 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

வெளிநாடு ஒன்றில் இருந்து 35 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

30 கார்த்திகை 2023 வியாழன் 03:39 | பார்வைகள் : 1765


குவைத்தில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 35 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த 35 பேரும் நேற்றைய தினம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்தவர்களில் 33 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், சில தொழிலாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தூதரகம் மற்றும் குவைத் உள்விவகார அமைச்சு ஆகியவற்றுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இவர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டில் பணியாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடவுச்சீட்டு அற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமாக கடவுச்சீட்டு வழங்கவும், விமானம் பயணச்சீட்டு வழங்கவும் இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வீட்டு பணியாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்ற பெருமளவான பெண்கள் இவ்வாறு தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருவதனை அவதானிக்க முடிகிறது.

இந்தவகையில், குவைத்தில் நிர்கதிக்குள்ளாகியுள்ள 3,450 இலங்கையர்கள் திரும்புவதற்காக தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவினரை விரைவில் இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், இவர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கு வாடகை விமானங்களை பயன்படுத்துவது குறித்து குவைத் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடனும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, விசா இன்றி குவைத்தில் தங்கியுள்ள மேலும் 35 வீட்டு பணியாளர்களைக் கொண்டு குழுவொன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்