சென்னையில் கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
30 கார்த்திகை 2023 வியாழன் 06:11 | பார்வைகள் : 2187
சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது. மீனம்பாக்கத்தில் அதிகப்பட்சமாக மழை பதிவாகி உள்ளது. நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கொளத்தூர் அஞ்சல் நகர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
ராயப்பேட்டை மெயின் ரோட்டில் மழை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.. சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் மழை நீர் தேங்கியுள்ளது.
வரும் டிசம்பர் 2, 3 தேதிகளில் வட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
இன்று சென்னையில் மேக திரட்சி காரணமாக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை
தொடரும் கன மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுமக்கள் அவரவர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் படி மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது
4 பேரிடர் மீட்பு குழுவினர் வருகை
தொடர் கன மழையால் மீட்பு பணிகளை மேறகொள்வதற்காக 4 பேரிடர் குழுவினர் தமிழகம் வருகின்றனர். இதில் 2 குழுவினர் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் 2 குழுவினர் விழுப்புரம் மாவட்டத்திற்கும் விரைகின்றனர்.