Paristamil Navigation Paristamil advert login

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் 14 நாள் சிகிச்சை அவசியம்!

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்  14 நாள் சிகிச்சை அவசியம்!

30 கார்த்திகை 2023 வியாழன் 09:15 | பார்வைகள் : 1775


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லாததால், அவருக்கு 14 நாட்கள் வரை தீவிர சிகிச்சை அவசியம்' என, சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சென்னை மணப்பாக்கம் பகுதியில் உள்ள மியாட் மருத்துவமனையில், காய்ச்சல் காரணமாக விஜயகாந்த், 71, தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 18ம் தேதி அனுமதிக்கப்பட்டார். காய்ச்சலுடன், இருமல், சளி தொந்தரவு இருந்ததால், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில், அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.

அவர், பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு, 14 நாட்கள் தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தீவிர சிகிச்சையில் இருக்கும் விஜயகாந்திற்கு நேற்று திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், சுவாசத்தை சீர் செய்ய, 'டிரக்கியாஸ்டமி' சிகிச்சை அளிக்க மருத்துவ குழு முடிவு செய்துள்ளது.

அத்துடன், வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கவும், விஜயகாந்த் குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தற்போதைய நிலையில், விஜயகாந்திற்கு பல்துறை டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்