விசாரணை வளையத்தில் தி.மு.க., - எம்.பி.,யின் கூட்டாளிகள்
30 கார்த்திகை 2023 வியாழன் 10:21 | பார்வைகள் : 2275
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த் நெருங்கிய கூட்டாளிகளையும், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
கடந்த, 2019ல் நடந்த தேர்தலில், வேலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார்.
அப்போது, துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்து, 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவருக்கு நெருக்க
மானவர்கள் வீடு, சிமென்ட் கிடங்குகளில் சோதனை செய்து, 11.55 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இப்பணம், வாக்காளர்களுக்கு பட்டு
வாடா செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரித்தனர். அப்போது, துரைமுருகன் மகனும், தி.மு.க., - எம்.பி.,யுமான கதிர் ஆனந்த், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதற்கு, அவரது நெருங்கிய கூட்டாளிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, நவ., 28ல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, கதிர் ஆனந்திற்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது; அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில், கதிர் ஆனந்தின் நெருங்கிய கூட்டாளிகளை, அமலாக்கத் துறையினர் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
வேலுாரில் முகாமிட்டு, பூஞ்சோலை சீனிவாசன்,தாமோதரன் ஆகியோருக்கும், கதிர் ஆனந்திற்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருகின்றனர். சட்ட விரோத பண பரிமாற்றத்தில், இருவரின் பங்கு குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
துரைமுருகன் அமைச்சராக உள்ள, நீர்வளத் துறையின் கீழ் நடத்தப்படும் குவாரிகளில் நடந்துள்ள மணல் கொள்ளை குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தற்போது, கதிர் ஆனந்த் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மீதான விசாரணையும் விரிவடைந்து இருப்பதாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழிலதிபர் வீடுகளில் 'ரெய்டு' சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வெளிநாடுகளுக்கு இரும்பு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவன உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், சென்னை, புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் சகோதரர்கள் வீடுகளில், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
இவர்கள், 'சேலம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ்' எனும் பெயரில் இரும்பு பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகின்றனர்
இவர்களின் வீடுகளில், வருமான வரித் துறையினரும் நேற்று சோதனை நடத்தினர். அரசு துறைகளுக்கு மின் சாதன பொருட்களை, இவர்கள் வினியோகம் செய்வதாகவும், அது தொடர்பாக நடந்த பணப் பரிமாற்றம் தொடர்பாகவும், சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
அதேபோல, மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், மகேந்திரா பி ஜெயின் மற்றும் அவரது சகோதரர் ரமேஷ்குமார் ஆகியோர் வீடுகளிலும், சோதனை நடத்தப்பட்டது.
ஜெயின் லால் எனும் அடுக்குமாடி குடியிருப்பில், மூன்றாவது மாடியில் வசிக்கும் ஜெயந்த் லால் என்பவரின் வீட்டிலும் சோதனை நடந்தது.
இவரது மனைவி, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இதன் வாயிலாக, சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடப்பது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக, அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.