கனேடிய மாகாணமொன்றில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
30 கார்த்திகை 2023 வியாழன் 07:13 | பார்வைகள் : 2673
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு பயங்கர தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 23 ஆம் திகதி, காலை 11.20 மணிக்கு வான்கூவரிலிருந்து புறப்பட்டு, மதியம் 12.45 மணிக்கு கால்கரியை வந்தடைந்த ஏர் கனடா நிறுவனத்தின் விமானத்தில் பயணித்த ஒரு பயணிக்கு மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் பயங்கர தொற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆகவே, மதியம் 12.45 மணியிலிருந்து 3.15 மணி வரையில் கால்கரி விமான நிலையத்தில் இருந்தவர்கள் தொற்று பாதித்த அந்த பயணியின் அருகில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆல்பர்ட்டா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆகவே, 23 ஆம் திகதி கால்கரி விமான நிலையத்தில் இருந்தவர்கள்,
24 ஆம் திகதி அந்த பயணி சென்ற சிறார் ஆல்பர்ட்டா மருத்துவமனையின் அவசர மருத்துவப்பிரிவின் காத்திருக்கும் அறையில் மாலை 4.00 மணி முதல் 9.30 மணி வரை இருந்தவர்கள்,
நவம்பர் 27 ஆம் திகதி ஆல்பர்ட்டா சிறார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவின் காத்திருப்பு அறையில் மதியம் 1.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை இருந்தவர்கள், ஆகியோர், மருத்துவமனையை அழைத்து ஆலோசனை கேட்கவும், தங்களுக்கு அறிகுறிகள் ஏதேனும் உள்ளனவா என்பதை கண்காணித்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் இந்த நோய் ஒரு பயங்கர தொற்றுநோய் என்றும், அது காற்றின்மூலம் எளிதாக பரவக்கூடியது என்றும், அதற்கு சிகிச்சை எதுவும் கிடையாது என்றும் ஆல்பர்ட்டா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.