Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் விமான சேவை!

இலங்கைக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் விமான சேவை!

30 கார்த்திகை 2023 வியாழன் 10:49 | பார்வைகள் : 6608


சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் என அழைக்கப்படும் நாட்டின் தேசிய விமான நிறுவனமான சவுதியா (Saudia) மிக விரைவில் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சவூதி அரேபியாவின் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் பின் அலிபிரஹிம் அறிவித்துள்ளார்.

இலங்கைக்கான விமான சேவைகளை சவூதி அரேபியா மீண்டும் தொடங்குவதன் ஊடாக, செல்வந்தர் பயணிகளின் கணிசமான சந்தையை கைப்பற்றுவதற்கு பங்களிக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 26ஆம் 27ஆம் திகதிகளில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் பைசல் பின் அலிபிரஹிம், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.

இதன்போது சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பரந்த அளவிலான பொருளாதார ஒத்துழைப்பை உருவாக்குவது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

வர்த்தகம் மற்றும் முதலீடு, மின்சாரம் ஆற்றல், சுற்றுலா, கலாசார தொடர்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் வேலை வாய்ப்புகளில் ஒத்துழைப்புகளை அதிகரிப்பது தொடர்பில் இருவரும் இதன்போது கலந்துரையாடியுள்ளனர்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில் இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள அண்மைக்கால தொடர் நடவடிக்கைகளுக்கு அமைச்சர் பைசல் பின் அலிபிரஹிமின் இந்த விஜயம் வலு சேர்க்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்