நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?
30 கார்த்திகை 2023 வியாழன் 15:08 | பார்வைகள் : 1949
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கோடைகாலத்தில் எந்தவித பிரச்சினையும் இருக்காது. ஏனென்றால் நேரத்திற்கு தூங்கி எழுந்து தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அத்துடன் கோடை காலத்தில் திட உணவுகளைக் காட்டிலும், குளிர் பானங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், மழை மற்றும் குளிர்காலம் அப்படியானது அல்ல. நாம் தூங்கி எழுவதற்கே வெகு நேரமாகிவிடும். மேலும் மழை, குளிர் போன்ற காரணங்களால் நாம் உடற்பயிற்சிக்கு வெளியே செல்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுவோம். இத்தகைய சூழலிலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்ன செய்யலாம்?
காலையில் வெதுவெதுப்பான சூட்டில் நெய் எடுத்துக் கொள்ளலாம். நெய் ஆரோக்கியமானது. நம் குடல் மற்றும் தொடைப் பகுதிகளில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க இது உதவும். இது தவிர வேறென்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
மெட்டபாலிச நடவடிக்கை மேம்படும் : வெதுவெதுப்பான நெய்யில் குறுகிய இணைப்பு கொண்ட கொழுப்பு அமிலங்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றை நம் உடல் உறிஞ்சிக் கொள்ளும். இது மட்டுமல்லாமல் நம் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கத் தொடங்கும். இதனால் நமது மெட்டபாலிச நடவடிக்கை மேம்படுவதுடன், கொழுப்புகள் எரிக்கப்படும்.
குடல் நலன் மேம்படும் : புடிரேட் என்னும் சத்து வெதுவெதுப்பான நெய்யில் கிடைக்கும். இது நம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் குடலின் உட்புறச் சுவர்கள் புத்துணர்ச்சி அடையும். அழற்சி தடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடல் நலனை மேம்படுத்தும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் கிடைக்கும்.
பசி குறையும் : காலையில் நெய் எடுத்துக் கொள்வதால் நம் பசி உணர்வு கட்டுப்படும். இதனால் நாம் அதிக உணவை உட்கொள்ள வாய்ப்பில்லை. குறைவான உணவு சாப்பிட்டாலும் நீண்ட நேரத்திற்கு திருப்தியான உணர்வு கிடைக்கும். கலோரிகளின் அளவு குறைவால் உடல் எடை குறைப்பிற்கு உதவியாக அமையும்.
எரிசக்தி மேம்படும் : நம் உடலுக்கு எரிசக்தியை தரக் கூடிய நடுத்தர பிணைப்பு டிரைகிளிசைரைடு அமிலங்கள் நெய்யில் உள்ளன. இது நம் உடலில் எளிமையாக உடைந்து ஆற்றலாக மாறும். ஆக, நமக்கு துரிதமான ஆற்றல் கிடைக்கும்.
இதய நலன் மேம்படும் : ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் அழற்சிக்கு எதிரான பண்புகள் நெய்யில் உள்ளன. அவை நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவிகரமாக அமையும். நம் உடலில் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகள் குறையும். நம் ரத்த நாளங்களின் செயல்பாடு மேம்பாடு அடையும்.
எப்படி எடுத்துக் கொள்ளலாம் : காலையில் நாம் அருந்தும் பாலில் ஒரு ஸ்பூன் அளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம். காலை உணவு தயாரிக்கும்போது எண்ணெய்க்குப் பதிலாக நெய் பயன்படுத்தலாம். இட்லி சாம்பாரில் நெய் சேர்த்து சாப்பிடலாம்.