தமிழக கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
2 மார்கழி 2023 சனி 06:48 | பார்வைகள் : 2723
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், கவர்னர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
'சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு மாநில கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அந்த மசோதாக்கள் சபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டால், அதை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு கவர்னர் அனுப்பி வைக்க முடியாது.
எனவே, தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்து பேசி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் மாநில கவர்னர் ரவி இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நிலவி வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 181 மசோதாக்கள், கவர்னர் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இவற்றில், 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வந்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. கடந்த மாதம் 10ம் தேதி இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, கடந்த மாதம் 13ம் தேதி, 10 மசோதாக்களுக்கு ஒப்புதல்மறுப்பதாக, தமிழக சட்டசபைக்கு கவர்னர் ரவி தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடர் கடந்த மாதம் 18ல் கூட்டப்பட்டது. அப்போது, கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்த 10 மசோதாக்கள் திருத்தம் இன்றி மீண்டும் சபையில் நிறைவேற்றப்பட்டன.
ஜனாதிபதிக்கு
இதை தொடர்ந்து, அந்த 10 மசோதாக்களையும் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு, கடந்த மாதம் 28ல் கவர்னர் அனுப்பி வைத்தார். தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், மசோதாக்களை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்த தகவலை, சட்டசபைக்கு நேற்று முன்தினம் கவர்னர் ரவி தெரிவித்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ''சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை, கவர்னர் ரவி, ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளார். இது அரசியலமைப்புக்கு விரோதமானது,'' என, வாதிட்டார்.
கவர்னர் ரவி தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி வாதிட்டதாவது:
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்புகிறார் என்றால், அதை அவர் நிறுத்தி வைத்துள்ளார் என்பது அர்த்தம் அல்ல; அதை மறுபரிசீலனை செய்யும்படி கோருகிறார் என்பதே பொருள். அதில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாநில அரசு மறுத்தால், அதை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசியலமைப்பு சட்டம் 200வது பிரிவின்படி, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னர்களுக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.ஒன்று அவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், இரண்டாவது அதை நிறுத்தி வைக்க வேண்டும், மூன்றாவது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த வழக்கில், மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக கவர்னர் ரவி முதலில் அறிவித்துவிட்டார். அந்த நிலையில், அதை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைக்க முடியாது. மூன்றில் ஒரு வாய்ப்பை மட்டுமே அவர் பயன்படுத்த முடியும்.
வாய்ப்பு இல்லை
ஒரு முறை மசோதாவை நிறுத்தி வைத்துவிட்டால், அதை தகுதி அற்றதாக்கிவிட முடியாது. மூன்று வாய்ப்புகளை தாண்டி நான்காவது வாய்ப்பு அவருக்கு வழங்கப்படாது.
நிறுத்தி வைத்த மசோதாக்களை அவர் சட்டசபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதை, திருத்தியோ அல்லது திருத்தம் செய்யாமலோ சபை மீண்டும் நிறைவேற்றினால், அதை ஏற்றுக் கொள்வதை தவிர கவர்னருக்கு வேறு வாய்ப்பு இல்லை.
பஞ்சாப் கவர்னர் மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 10ம் தேதி ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. தமிழக முதல்வர் - கவர்னர் இடையே பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. எனவே, முதல்வரை நேரில் அழைத்து கவனர் பேசி இந்த முட்டுக்கட்டைகளை அகற்றினால் இந்த நீதிமன்றம் வெகுவாக பாராட்டும்.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது