வங்கிக்கு வராமல் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள்
2 மார்கழி 2023 சனி 09:54 | பார்வைகள் : 2260
கடந்த நவம்பர் 30ம் தேதி நிலவரப்படி, இன்னும் 9,760 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், 97.26 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கி அமைப்புக்குள் திரும்பி வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, கடந்த மே மாதம் 19ம் தேதி, 2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அப்போது, 3.56 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள கடந்த செப்டம்பர் 30 தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு, பின்னர், அக்டோபர் 7ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 8ம் தேதி முதல், நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது 'இந்தியா போஸ்ட்' வாயிலாக பணத்தை அனுப்பியோ, கணக்கில் வரவு வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.