உள்துறை அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்! - குடிபோதையில் செய்ததாக தெரிவிப்பு!!

2 மார்கழி 2023 சனி 11:00 | பார்வைகள் : 9459
உள்துறை அமைச்சர் Gérald Darmanin இற்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுத்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குடி போதையில் மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் தென்கிழக்கு நகரமான Hyères (Var) இல் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 50 வயதுடைய குறித்த நபர் கடந்த திங்கட்கிழமை உள்துறை அமைச்சர் Gérald Darmanin இற்கு கொலை மிரட்டல் ஒன்றை விடுத்திருந்தார். “நாங்கள் உங்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுக்க விரும்புகிறோம். நாங்கள் உங்களை கொல்வோம். நீங்கள் கால்வதுறையினரால் சூழ்ந்திருக்கலாம். ஆனால் உங்களை நோக்கி பாயும் துப்பாக்கி குண்டை தடுக்க முடியாது!” என அந்த மின்னஞ்சல் மூலமாக அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
அதையடுத்து உள்துறை அமைச்சர் வழக்கு தொடுத்திருந்தார்.
பின்னர், வியாழக்கிழமை மாலை Hyères நகர காவல்துறையினர் குறித்த நபரைக் கைது செய்தனர். தற்போது காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர், குடிபோதையில் மேற்படி காரியத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்தார்.