இலங்கை- தமிழகம் இடையே தரைவழிப் பாலம் கட்ட திட்டம்
2 மார்கழி 2023 சனி 06:47 | பார்வைகள் : 2484
தலைமன்னார் மற்றும் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் கட்டுவது தொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே வடக்கிற்கான விஜயங்களை மேற்கொண்டு யாழ்ப்பாணம், தலைமன்னார் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகின்றார். மேலும் யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இது தொடர்பில் கோபால் பாக்லே தெரிவிக்கையில்,
“இலங்கை- இந்தியா இடையேயான எரிபொருள் குழாய் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இலங்கையின் வடக்கு பகுதி வழியாக திருகோணமலையை சென்றடையும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மன்னார் மாவட்டத்தில் தலைமன்னாரில் உள்ள படகு இறங்குதுறை பகுதிகளை ஆய்வு செய்தேன். தலைமன்னார்- தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் இடையேயான கப்பல் சேவையை தொடங்குவது குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
தலைமன்னார்- தமிழ்நாட்டின் தனுஷ்கோடி இடையே தரைவழிப்பாலம் அமைப்பதற்கான திட்டத்தை கைவிடவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
இலங்கையின் வடக்கு பகுதியில் சீனா காலூன்ற முயற்சிக்கிறது. இது இந்தியாவின் தென் பகுதி பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.