Seine-et-Marne : ஸ்பெயினில் இருந்து கடத்திவரப்பட்ட 300 கிலோ கொக்கைன் போதைப்பொருள் மீட்பு!
2 மார்கழி 2023 சனி 17:00 | பார்வைகள் : 5006
ஸ்பெயினில் இருந்து பிரான்சுக்கு கடத்திவரப்பட்ட 300 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு Seine-et-Marne மாவட்டத்தை ஊடறுக்கும் A5 நெடுஞ்சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர், Saint-Germain-Laxis சுங்கச்சாவடி அருகே வைத்து மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்தினர்.
காவல்துறையினரை கண்ட மகிழுந்து சாரதி அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார். அதையடுத்து காவல்துறையினர் துரத்திச் சென்று மகிழுந்தை மடக்கிப் பிடித்தனர்.
மகிழுந்துக்குள் இருந்து 300 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை காவல்துறையினர் மீட்டனர். மகிழுந்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டு அண்மையில் விடுதலையாகியிருந்தார்.
குறித்த நபர் ஸ்பெயினில் இருந்து குறித்த போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை அடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நபர் அதே மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.