இயற்கை அதிசயம் - ஒளிரும் காளான்கள்
3 மார்கழி 2023 ஞாயிறு 06:23 | பார்வைகள் : 2581
இயற்கையின் அதிசயங்களில் ஒளி உமிழும் காளானும் ஒன்று. உலகில் சுமார் 103 வகையான ஒளி உமிழும் காளான்கள் உள்ளன. இதில் 7 வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன.
இந்த வகை காளான்களின் வித்துகள், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும், ஏனைய உயிரினங்களையும் கவர்வதற்காக ஒளி உமிழும் தன்மையை பெற்றிருக்கின்றன.
இவ்வகையான காளான்களில் நடைபெறும் வேதியியல் மாற்றத்தின் விளைவால் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் இளம் பச்சை ஒளியாக வெளியேறுகிறது. இதுவே அக்காளான்களின் திசுக்களை ஒளிரவைக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தின் கன்னியாகுமரி வன உயிரின சரணாலய பகுதியில் வனத்துறையினருடன் இணைந்து ஆய்வுக்காக சென்ற குழுவினர், ஒளிரும் காளான்களை புகைப்பட பதிவு செய்துள்ளனர்.
நாங்கள் கண்டறிந்த பகுதியில் உயிர் இல்லாத மூங்கில்களில் தான் இந்த வகை காளான்கள் வளர்ந்திருந்தன. வேறு எங்கு தேடியும் இவை காணக்கிடைக்கவில்லை. பகலிலும் இந்த வகை காளான்கள் ஒளிர்ந்து கொண்டேதான் இருக்கும்.ஆனால், வெளிச்சம் காரணமாக நம் கண்ணுக்கு தெரியாது.
இரவில், மற்ற எந்த வெளிச்சமும் இல்லாதபோது மட்டுமே நம் கண்களுக்கு புலப்படும். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி முழுவதும் இந்த வகை காளான்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன.