வேறு இரு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய - பரிஸ் தாக்குதலாளி!
3 மார்கழி 2023 ஞாயிறு 10:37 | பார்வைகள் : 5105
நேற்று பரிசில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி, முன்னதாக பிரான்சில் இடம்பெற்ற இரு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
Armand R எனும் 26 வயதுடைய பயங்கரவாதி நேற்று சனிக்கிழமை வீதியில் சென்ற சுற்றுலாப்பயணிகள் மூவரை தாக்கியிருந்தார். .இதில் ஒருவர் கொல்லப்பட்டும், இருவர் காயமடைந்தும் இருந்தனர். இந்த தாக்குதலாளி கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்பான விசாரணைகள் எல்லா பக்கங்களிலும் இருந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முன்னதாக பிரான்சில் இடம்பெற்ற இரண்டு தாக்குதல்களில் Armand R தொடர்புபட்டுள்ளதாகவும், தாக்குதலாளிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் திகதி Magnanville நகரில் வசித்த இரு காவல்துறை தம்பதியினரை கத்தியால் குத்திக் கொன்ற பயங்கரவாத தாக்குதல் நினைவிருக்கலாம். அந்த தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி Larossi Aballa உடன் Armand R தொடர்பில் இருந்ததாகவும், பல்வேறு தகவல்களை இருவரும் பகிர்ந்துகொண்டுள்ளதாகவும், இருவரும் பேஸ்புக் நண்பர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், aதே 2016 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி Saint-Etienne- du-Rouvray தேவாலயத்துக்குள் நுழைந்த ஆயுததாரி Adel Kermiche, அங்கிருந்த திருத்தந்தை Jacques Hamel என்பவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியிருந்தார். ஒட்டுமொத்த பிரான்சையும் உலுக்கியிருந்த இந்த பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட Adel Kermiche உடன் Armand R தொடர்பில் இருந்ததாகவும் அறிய முடிகிறது.
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.